சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து நேற்று செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம்
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜூ, சக்திவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு, மின் கட்டண உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
இதில், மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் பேசியதாவது:-
மக்கள் மீது அக்கறை இல்லை
தமிழகத்தில் ஏழை, நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மின் வெட்டு அல்லது மின் கட்டணம் உயர்த்தப்பட்டதா?. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி நடந்தது. ஆனால் தற்போது 30 முதல் 50 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி சிறு, குறு தொழில்களும் பாதிக்கப்படும். எனவே, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
தமிழகத்தில் தற்போது தேர்தல் நடந்தால் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், பகுதி செயலாளர்கள் மாரியப்பன், பாலு, சரவணன், முருகன், யாதவமூர்த்தி, ஜெயபிரகாஷ், பாண்டியன், சண்முகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜான்கென்னடி, தகவல் தொழில்நுட்ப அணி மாநகர் மாவட்ட செயலாளர் கனகராஜ், கொண்டலாம்பட்டி முன்னாள் மண்டலக்குழு தலைவர் மோகன், அம்மாபேட்டை பகுதி அவைத்தலைவர் பாலமுரளி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கே.எஸ்.சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.