அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கைது


அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கைது
x

காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்த அ.தி.மு.க. வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.. இதனை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்த அ.தி.மு.க. வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.. இதனை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்பாடி ரெயில்வே மேம்பாலம்

காட்பாடி ரெயில்வே மேம்பாலம் கடந்த மாதம் 1-ந்தேதி சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டது. போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதைகளில் வாகனங்கள் இயக்கப்பட்டன. ஒரு மாதத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது. அதனால் நேற்று முதல் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மேம்பாலத்தில் நேற்று முதல் இருசக்கர வாகனங்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று காலை அ.தி.மு.க. வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையிலான அ.தி.மு.க.வினர் பாலத்தின் அருகே திரண்டு வந்தனர். அவர்கள் பாலத்தின் மீது ரிப்பன் கட்டினர். இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பாலத்தை சீரமைக்க நாங்கள் தான் காரணம். பாலத்தில் அனைத்து வாகனங்களையும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து வைத்தார்.

தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையே தள்ளு முள்ளு

இதுபற்றி தகவல் அறிந்த தி.மு.க. பகுதி செயலாளர் வன்னியராஜா தலைமையில் மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா மற்றும் தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அப்புவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காட்பாடி போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் அ.தி.மு.க., வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

கதிர்ஆனந்த் எம்.பி. பார்வையிட்டார்

இந்த நிலையில் டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி., காட்பாடி ரெயில்வே மேம்பாலத்திற்கு வந்து பார்வையிட்டார். அப்போது வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில்குமார், நிர்வாகி வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் மற்றும் தி.மு.க.வினர் உடன் இருந்த்னர்.

பின்னர் கதிர் ஆனந்த் எம்.பி. நிருபர்களுக்கு கூறியதாவது:-

காட்பாடி ரெயில்வே மேம்பாலம் பழுதடைந்ததை மத்திய அரசு அதிகாரிகளிடம் கூறி நிதி கேட்டேன். அவர்கள் ஒதுக்கீடு செய்த ரூ.1 கோடியில் மேம்பாலம் சீரமைக்கப்பட்டது. இன்று (நேற்று) முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் கீழ்தரமான அரசியலில் ஈடுபட்டனர்.

4-ந்தேதி முதல் அனைத்து வாகனங்கள் இயக்கம்

இது தவறான செயல். பணிகள் முடிந்தால் தான் முழுமையாக வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். அதிகாரிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு மேம்பாலத்தில் சாலை அமைக்கப்படும். 4-ந்தேதி முதல் அனைத்து வாகனங்களும் இயக்கப்படும் வகையில் மேம்பாலம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்

கைது

இந்த சம்பவம் குறித்து தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் பவித்ரா காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் செங்குட்டையில் உள்ள அப்புவின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் அப்பு வீட்டின் முன்பு குவிந்தனர். அவரை காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடமும் மற்ற நிர்வாகிகளிடமும் விசாரணை நடந்தது. அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, காட்பாடி பகுதி செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோரை 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் நிலையம் முன்பு மறியல்

கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் காட்பாடி போலீஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் செய்தனர். பின்னர் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, பகுதி செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோரை வேனில் இரவு 8.15 மணிக்கு ஏற்றினர். வேன் முன்பு அ.தி.மு.க., நிர்வாகிகள் திரண்டு வேன் செல்ல விடாமல் தடுத்தனர்.

பின்னர் பாதுகாப்புக்கு நின்றிருந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார் அ.தி.மு.க. நிர்வாகிகளை அப்புறப்படுத்தி வேன் செல்ல வழிவகை செய்தனர். தொடர்ந்து காட்பாடி போலீஸ் நிலையத்திற்குள் பொதுமக்கள் யாரும் செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மேலும் காட்பாடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றம் நிலவுகிறது.


Next Story