ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்ட வழக்கில் 11-ந்தேதி தீர்ப்பு


ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்ட வழக்கில் 11-ந்தேதி தீர்ப்பு
x

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை 11-ந்தேதி காலை 9 மணிக்கு பிறப்பிப்பதாக ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

சென்னை,

அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், 'இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம் இல்லை. எனவே, இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழு கூட்டப்படுவது தொடர்பாக பல்வேறு கேள்வி களை நேற்று முன்தினம் எழுப்பியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நிராகரிப்பு

அப்போது, தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பதில் மனுவை மேற்கோள் காட்டி, எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல்கள் விஜய் நாராயண், எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்கள் வாதத்தில் கூறியதாவது:-

2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை கட்சியின் அடிப்படை தொண்டர்கள் தேர்ந்து எடுப்பார்கள் என கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதற்கு ஜூன் 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவேண்டும். ஆனால், அந்த பொதுக்குழுவில் அந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவு

எனவே, கடந்த டிசம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் நடந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் செல்லாது. இரு பதவிகளும் காலியாகி விட்டன என தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. கட்சியின் இரு பதவிகளும் காலியாகி விட்டதால், நிர்வாகத்தில் எந்த வெற்றிடமும் ஏற்படாது. நிர்வாகத்தை கவனிக்க தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளனர்.

இதற்கு முன்பு நடந்த பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் வழங்கப்படுவதில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா சிறை சென்ற பின்னர், 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி பொதுக்குழு நடந்தது. அந்த பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் தலைமைக்கழக நிர்வாகிகளால் தான் அனுப்பப்பட்டது. அதேபோல தற்போதும் பொதுக்குழுவுக்கு தலைமைக் கழக நிர்வாகிகளால் அழைப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அவசியம் இல்லை

வழக்கமான பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதாக இருந்தால்தான் 15 நாட்களுக்கு முன் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால், ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழுவை கூட்டவேண்டும் என கோரிக்கை வைத்தால், அன்றில் இருந்து 30 நாட்களுக்குள் கூட்டத்தை கூட்ட வேண்டும். அதாவது 15 நாளுக்கு முன்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

கடந்த மாதம் 23-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில்தான், மீண்டும் பொதுக்குழுவை கூட்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் கூட்ட முடிவு செய்யப்பட்டது. அதனால், கடைசி நேரத்தில் நோட்டீஸ் அனுப்பியதாக மனுதாரர் கூற முடியாது.

ஒற்றை தலைமை

2 ஆயிரத்து 665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2 ஆயிரத்து 190 உறுப்பினர்கள் வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டுவதற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளனர். மேலும், 2 ஆயிரத்து 432 பொதுக்குழு உறுப்பினர்கள், ஒற்றைத்தலைமை குறித்து விவாதித்து பொதுக்குழுவில் முடிவு எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கட்சியின் பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும். முன் அனுமதி பெறாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க., தலைமைக்கழக நிர்வாகிகள் சார்பில் வக்கீல் நர்மதா சம்பத் ஆஜராகி வாதிட்டார்.

தவறானது

மனுதாரர்கள் ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், வக்கீல் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் கூறியதாவது:-

2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த செயற்குழு தீர்மானத்தின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றனர். அது தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பதவிக்கான தீர்மானத்தை கடந்த மாதம் நடந்த பொதுக்குழு நிராகரித்து விட்டது. அதனால், இந்த இரு பதவிகளும் காலியாகி விட்டது என்று கூறுவதே தவறானது.

ஒப்புதல் தேவை இல்லை

ஒட்டு மொத்தமாக உள்கட்சி தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டும் காலியாக இருப்பதாக எப்படி கூற முடியும்? கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழுவின் ஒப்புதல் தேவையில்லை. ஏனென்றால் இந்த பதவிக்காக கட்சி விதியில் திருத்தம் செய்து அது அமலுக்கு வந்து விட்டாலே, பொதுக்குழுவின் ஒப்புதல் என்பது வழக்கமான நடைமுறையாகத்தான் இருக்கும்.

கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர். இறந்தபோது என்ன ஆனது? என்பதை எடப்பாடி பழனிசாமி தரப்பில் விளக்கம் அளிக்கவில்லை.

தீர்ப்பு

தலைவர்கள் உயிருடன் இல்லாத போதுதான் பதவி காலியானதாக கருத முடியும். அ.தி.மு.க.வை பொறுத்தவரை 1987-ம் ஆண்டு மற்றும் 2016-ம் ஆண்டு மட்டுமே அப்படி ஒரு நிலை ஏற்பட்டது. சிறப்பு பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாள் நோட்டீஸ் தேவை இல்லை என எதிர்மனுதாரர்கள் தரப்பில் கூறப்படுவது தவறு. சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும், வழக்கமான பொதுக்குழுவாக இருந்தலும் கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்தான் கூட்ட வேண்டும்.

இவ்வாறு இவர்கள் வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழுவுக்கு தடை கேட்கும் மனு மீதான தீர்ப்பை வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு வழங்குகிறேன் என்று அறிவித்தார்.


Next Story