பொது நல இயக்கங்கள் நடத்தும் போராட்டத்துக்கு அ.தி.மு.க. துணை நிற்கும்


பொது நல இயக்கங்கள் நடத்தும் போராட்டத்துக்கு அ.தி.மு.க. துணை நிற்கும்
x

கடலூர் பஸ் நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றுவதை கண்டித்து பொது நல இயக்கங்கள் நடத்தும் போராட்டத்துக்கு அ.தி.மு.க. துணை நிற்கும் என்று முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

கடலூர்

கடலூர் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு, அரசியல் கட்சிகள், வியாபார சங்கங்கள், பொது நல அமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். செயல் ஒருங்கிணைப்பாளர் திருவரசு, இணை ஒருங்கிணைப்பாளர்கள் தர்மராஜ், செல்வம், கஜேந்திரன், சையது முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது நல அமைப்பு ஆலோசகர் சேகர் வரவேற்றார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத், த.மா.கா. துணை தலைவர் பி.ஆர்.எஸ். வெங்கடேசன், அ.ம.மு.க. மாநகர செயலாளர் ராதாகிருஷ்ணன், பா.ம.க. நகர செயலாளர் பால்ராஜ், ம.தி.மு.க. மோகன்ராஜ், தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்டு கட்சி மாநில தலைவர் சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அ.தி.மு.க. துணை நிற்கும்

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், பஸ் நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும். மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடைகள் கட்டி பாரம்பரியத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. இதை கண்டித்து பொது நல இயக்கங்கள் நடத்தும் போராட்டத்துக்கு அ.தி.மு.க. துணை நிற்கும் என்றார்.

இதில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன், வர்த்தக அணி வரதராஜன், மணிமாறன், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், மக்கள் அதிகாரம் ராமலிங்கம், தி.க. மாதவன், தமிழர் கழகம் பரிதிவாணன், பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கடலூர் பஸ் நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றக்கூடாது. பாரம்பரிய மிக்க மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடைகள் கட்டி வணிகமயமாக்கக்கூடாது என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story