ஆத்தூர் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 21 பேர் மீதான வழக்கு மீண்டும் விசாரணை


ஆத்தூர் கோர்ட்டில்  அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 21 பேர் மீதான வழக்கு மீண்டும் விசாரணை
x

ஆத்தூரில் அண்ணா சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சின்னத்தம்பி உள்பட 21 பேர் மீதான வழக்கு மறு விசாரணை தொடங்கியது.

சேலம்

ஆத்தூர்,

அண்ணா சிலை சேதம்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

தமிழகத்தை உலுக்கிய இந்த தீர்ப்பை கேள்விப்பட்டதும், ஆத்தூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலை முன்பு அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த சின்னத்தம்பி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரஞ்சித் குமார், வி.பி.சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் 21 பேர் கூடினர். அவர்கள் அண்ணா சிலையை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

21 பேர் விடுதலை

இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் கிராம நிர்வாக அலுவலர் சவுந்தரராஜன் ஆத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 21 பேர் மீது ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஆத்தூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ேகார்ட்டில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தி.மு.க. சார்பில் நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை, இந்த வழக்கை மீண்டும் விசாரித்திட போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அண்ணா சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கை மீண்டும் விசாரித்து புதிய குற்றப்பத்திரிகையை ஆத்தூர் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்திட கடந்த மாதம் உத்தரவிட்டது.

மீண்டும் விசாரணை

இதையடுத்து அண்ணா சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின் பேரில், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மறுவிசாரணை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சின்னத்தம்பி உள்பட 21 பேர் மீதான குற்றப்பத்திரிகையை ஆத்தூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் நேற்று தாக்கல் செய்தனர்.

அப்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுவதாக மாஜிஸ்திரேட்டு முனுசாமி உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஆத்தூர் கோர்ட்டில் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story