அ.தி.மு.க. ஆட்சியின் நல்ல திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தாமல் இருப்பது ஏன்?-மாபா பாண்டியராஜன் கேள்வி


அ.தி.மு.க. ஆட்சியின் நல்ல திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தாமல் இருப்பது ஏன்?-மாபா பாண்டியராஜன் கேள்வி
x
தினத்தந்தி 30 March 2023 6:45 PM GMT (Updated: 30 March 2023 6:46 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சியின் நல்ல திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தாமல் இருப்பது ஏன்?-மாபா பாண்டியராஜன் கேள்வி

விருதுநகர்

சாத்தூர்

மக்களின் நலன் கருதி அ.தி.மு.க. ஆட்சியின் நல்ல திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கேள்வி எழுப்பினர்.

ஜவுளி பூங்கா திட்டம்

சாத்தூர் மாரியம்மன், காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நான்காம் நாள் மண்டகப்படியில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்மாபா பாண்டியராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு 7 தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம் உருவாக்க திட்டமிட்டது. சாத்தூர் அருகே குமாரலிங்கபுரத்தில் 1,058 ஏக்கரில் அமைய உள்ள மத்திய அரசின் ஜவுளி பூங்கா திட்டம் அ.தி.மு.க. அரசின் சிறப்பான செயல்பாட்டினால் கொண்டு வரப்பட்ட ஒரு உன்னத திட்டமாகும். அச்சன்கோவில், பம்பா நதிநீர் இணைப்பு திட்டத்தினை விவசாயி குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

செயல்படுத்த வேண்டும்

இந்த நதிநீர் இணைப்பின் மூலம் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,75000 எக்டர் விவசாய நிலப்பரப்பு பயன்பெறும். குண்டாறு, வைப்பாறு இணைப்பு திட்டம் ஜெயலலிதாவால் வகுக்கப்பட்ட ஒரு மகத்தான திட்டமாகும். இதில் 12 பேர் கொண்ட நிபுணர்கள் குழு ஆராய்ந்து பின்னர் விஷன் 2023-ல் சேர்க்கப்பட்டது. மேலும் இந்த திட்டங்கள் இணைப்பின் மூலம் சாத்தூரைச் சுற்றியுள்ள நிலங்கள் பாசன வசதி பெறும். அ.தி.மு.க. ஆட்சியில் நல்ல திட்டங்களை அ.தி.மு.க. கொண்டு வந்தது என்ற காரணத்திற்காக கிடப்பில் போடாமல் மக்களின் நலன் கருதி தி.மு.க. அரசு செயல்படுத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, நகரச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் சீதாராமன், ஹவுசிங் போர்டு கிளைச் செயலாளர் கண்ணன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.


Next Story