அண்ணா பிறந்தநாளையொட்டி பெரம்பலூர், குன்னம் தொகுதிகளில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
அண்ணா பிறந்தநாளையொட்டி பெரம்பலூர், குன்னம் தொகுதிகளில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரான அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி வருகிற 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை அ.தி.மு.க. பொதுக்கூட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறுகின்றன. அதன்படி வருகிற 19-ந் தேதி பெரம்பலூர் தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பொன்.ராஜா, சிட்கோ சீனு, மணவை மாறன், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதேபோல் குன்னம் தொகுதியில் 20-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு.க. கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாச்சலம், அண்ணா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் துளசிதாஸ், தில்லை கோபி, கோவை கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.