அ.தி.மு.க. தேர்தல் பணிமனை பிளக்ஸ் பேனரில் காலையில் வைத்த பெயர் மாலையில் மாற்றம்பா.ஜனதா தலைவர்கள் படங்கள் இல்லை


பா.ஜனதா தலைவர்கள் படங்கள் இல்லை

ஈரோடு

அ.தி.மு.க. தேர்தல் பணிமனை பிளக்ஸ் பேனரில் காலையில் வைத்த பெயர் மாலையில் மாற்றம் செய்யப்பட்டது. இதில் பா.ஜனதா தலைவர்கள் படங்கள் இல்லாமல் வைக்கப்பட்டு இருந்தது.

புதிய கூட்டணி பெயர்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தலைமை பணிமனை அ.தி.மு.க. சார்பில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே திறக்கப்பட்டது. இந்த பணிமனையின் பிளக்ஸ் பேனரில் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பதிவு செய்யப்பட்டு இருந்தது.

ஏற்கனவே பா.ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேசிய அளவில் உள்ளது. இந்த கூட்டணியில் அ.தி.மு.க. இருந்தது.

ஆனால், நேற்று அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று புதிய கூட்டணி பெயருடன் பிளக்ஸ் பேனர் அச்சிடப்பட்டு இருந்தது. இந்த பேனரில் பா.ஜனதா தலைவர்கள் படங்கள் எதுவும் வைக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாலையில் மாற்றம்

அதே நேரம் கூட்டணியில் உள்ள த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரின் படங்கள் மற்றும் பல்வேறு தலைவர்களின் படங்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் படங்கள் இந்த பேனரில் இருந்தது.

பிளக்ஸ்பேனரில் இருந்த பெயர் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று மாைல பிளக்ஸ் பேனர் மாற்றப்பட்டது. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி என்று அச்சிடப்பட்டு இருந்தது.

நெருக்கம்

இதற்கிடையே அ.தி.மு.க. (எடப்பாடி பழனிசாமி) அணி சார்பில் வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை சென்னையில் நடந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. (ஓ.பன்னீர்செல்வம்) அணி வேட்பாளராக ஈரோட்டை சேர்ந்த செந்தில் முருகன் என்பவரை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். தொடர்ந்து ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தலைமையில் வேட்பாளர் செந்தில்முருகன் அறிமுக கூட்டமும் நடந்தது. எடப்பாடி பழனிசாமி அணி பா.ஜனதாவை தங்கள் அணியில் இருந்து தள்ளி வைத்து இருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, பா.ஜனதா போட்டியிட்டால் எங்கள் வேட்பாளரை திரும்ப பெறுவோம் என்று அறிவித்து, பா.ஜனதாவுக்கு நெருக்கமாக இருப்பதை காட்டி உள்ளனர்.

இப்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பல முனை போட்டி இருப்பதால் யாருக்கு வாக்களிப்பது என்று வாக்காளர்கள் குழப்பத்துடன் இருப்பதைவிட, யாருக்கு ஆதரவு அளிப்பது என்று அ.தி.மு.க.வினர் குழப்பத்தில் உள்ளனர்.


Next Story