போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் புகார்
கடையம் யூனியன் துணை தலைவர் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் புகார் மனு கொடுத்தார்.
கடையம் யூனியன் அ.தி.மு.க. கவுன்சிலர் தங்கம் என்பவர் நேற்று தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், "நான் கடையம் யூனியன் 9-வது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்று மக்கள் பணியாற்றி வருகிறேன். கடையம் யூனியன் துணைத் தலைவர் மகேஷ் மாயவன் என்னை தவறாக வெளியிடங்களில் பேசி அவதூறு பரப்பி வருகிறார். நான் பலமுறை அவரிடம் நேரில் தெரிவித்தும் சக கவுன்சிலர்கள் அறிவுறுத்தியும் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். கடந்த 27-ந் தேதி நடைபெற்ற யூனியன் கூட்டத்தில் எனது வார்டுக்கு தேவையான பணிகள் குறித்து நான் கேள்வி எழுப்பிய போது என்னிடம் வாய் தகராறில் ஈடுபட்டார். மேலும் அவர் எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
அவருடன் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஜனதா, மணிகண்டன், இசக்கியம்மாள் ஆகியோரும் வந்திருந்தனர்.