`அ.தி.மு.க. - பா.ஜனதா உறவில் எந்த குழப்பமும் இல்லை': அண்ணாமலை பேட்டி
`அ.தி.மு.க. - பா.ஜனதா உறவில் எந்த குழப்பமும் இல்லை' என்று பா.ஜனதா அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
பா.ஜனதா-அ.தி.மு.க. உறவில் எந்த குழப்பமும் இல்லை என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
பேட்டி
நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு விமான நிலையத்தில் அவர் `கேக'் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்ப்பிணிகளுக்கு ஹெல்த் மிக்ஸ் என்ற பெயரில் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குவதில் அரசுக்கு ரூ.77 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. அந்த பொருட்களை கொள்முதல் செய்ய ஆவின் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்காமல் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்க முயற்சி செய்து உள்ளனர். இதற்காக ரூ.450 கோடிக்கு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.100 கோடி பெறப்பட்டு உள்ளது.
முறைகேடு
தமிழக அரசு பொங்கல் தொகுப்பு வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ற நிலையில் இந்த பொங்கல் பொருட்களை சரியாக வழங்காத நிறுவனங்கள் வரும் காலங்களில் எந்த ஒப்பந்தங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என தமிழக முதல்-அமைச்சர் அவற்றை கருப்பு பட்டியலில் வைத்துள்ளார். அதே நிறுவனம் மீண்டும் தற்போது இந்த ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது ஏன்?.
ஊட்டச்சத்து பொருட்கள் ஆவின் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை?. இதற்கான ஒப்பந்தங்கள் இன்னும் இரண்டு தினங்களில் திறக்கப்பட உள்ளது அப்போது குறைந்த விலை பட்டியல் கொடுத்த 2 நிறுவனத்தின் விவரத்தை தமிழக அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
குழப்பம் இல்லை
அ.தி.மு.க.-பா.ஜனதா இடையே எந்த குழப்பமும் இல்லை. பா.ஜனதா கட்சி பற்றி அந்த கட்சியின் சில தலைவர்கள் கூறிய கருத்து அவர்களுடைய தனிப்பட்ட கருத்து.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடைய கருத்துக்களே அதிகாரப்பூர்வமாக கருத்து. அ.தி.மு.க. எங்களுடன் நெருங்கிய நட்பு கொண்ட கட்சி. அவர்கள் மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
------------------------------