அ.தி.மு.க. விவகாரம்: இடைக்கால பொதுச்செயலாளர் பெயரில் கடிதம் அனுப்பப்படுமா? சத்யபிரத சாகு பதில்


அ.தி.மு.க. விவகாரம்: இடைக்கால பொதுச்செயலாளர் பெயரில் கடிதம் அனுப்பப்படுமா? சத்யபிரத சாகு பதில்
x

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் பெயரில் கடிதம் அனுப்பப்படுமா என்ற கேள்விக்கு சத்யபிரத சாகு பதில் அளித்துள்ளார்.

சென்னை,

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிக்க வசதியாக 'ரிமோட்' மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவது தொடர்பாக டெல்லியில் 18-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு அ.தி.மு.க. அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் தமிழக தேர்தல் ஆணையம் 2 முறை கடிதம் அனுப்பியது. ஆனால் அந்த கடிதத்தை அ.தி.மு.க.வினர் திருப்பி அனுப்பி விட்டனர்.

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் கடிதம் வந்தால் மட்டுமே பெறுவோம் என்று அ.தி.மு.க. தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பேட்டியளித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. விவகாரம்

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம், இந்திய தேர்தல் கமிஷன் கொடுத்த முகவரியின் அடிப்படையில் அனுப்பப்பட்டது. அ.தி.மு.க. மட்டுமல்லாமல் மற்ற கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷன் கொடுத்த முகவரிக்குதான் அனுப்பப்பட்டன. அதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்களோ, இல்லையோ, ஆனால் கடிதத்தை அனுப்பியதற்கான அத்தாட்சியை தேர்தல் கமிஷன் கேட்டபடி அதை அனுப்பிவிட்டோம்.

இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவி பெயர் போட்டு கடிதம் அனுப்பப்படுமா? என்று கேட்டால், தேர்தல் கமிஷன் உத்தரவுப்படிதான் கடிதம் அனுப்பப்படும். அனுப்பிய கடிதம் திருப்பி அனுப்பப்பட்டது பற்றி தேர்தல் கமிஷனுக்கு கூறிவிட்டோம். அதன் பிறகு எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story