அ.தி.மு.க. செயற்குழுவுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது -ஐகோர்ட்டு திட்டவட்டம்
வருகிற 16-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்துக்கு எதிராக தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டமாக கூறியுள்ளது.
சென்னை,
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச்செயலாளர் தேர்தலையும் எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் வருகிற 20 மற்றும் 21-ந் தேதிகளில் விசாரிக்கப்படும் என்று ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த மேல்முறையீட்டு மனுக்களை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முறையிடப்பட்டது.
இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது.
கர்நாடகா தேர்தல்
அப்போது நீதிபதிகள், "இந்த வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுக்க வேண்டிய அவசியம் என்ன?'' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர்களில் ஒருவர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் மணிசங்கர், 'கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடவும், வேட்பாளர்களை தேர்வு செய்யவும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்குவதற்காகவும் வருகிற 16-ந் தேதி செயற்குழு கூட்டப்படுகிறது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருடன் கலந்து பேசி பொதுக்குழுவில் முடிவு எடுக்க உத்தரவிட்டது. செயற்குழு கூட்டம் குறித்த கடந்த 6-ந் தேதி அறிவிப்பில் அழைப்பிதழுடன் கூட்டத்துக்கு வர வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் மனுதாரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.
ஆதரவு இல்லை
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய்நாராயண், 'சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோது, ஈரோடு இடைத்தேர்தல் நடந்ததால், அப்படி ஒரு இடைக்கால உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது. அந்த சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனரா? அவருக்கு பொதுக்குழுவில் கூட செல்வாக்கு இல்லை. வெறும் 4 பொதுக்குழு உறுப்பினர்கள்தான் அவருக்கு ஆதரவாக உள்ளனர்' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், செயற்குழுவில் என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மூத்த வக்கீல் விஜய்நாராயண், கர்நாடகா மாநில தேர்தலில் பங்கேற்பது, கூட்டணி முடிவு செய்வது, தொகுதிகள், வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்ய போகிறோம் என்றார்.
400 ஆக உயரும்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், 'ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 4 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கலாம். ஆனால், அவர் கட்சிக்குள் வந்து விட்டால், 4 என்பது 400 ஆக மாறும். ஏற்கனவே, இடைக்கால வழக்கு தனி நீதிபதி முன்பு நிலுவையில் இருந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் கேட்டு விட்டு, பொதுச் செயலாளர் தேர்தலை அறிவித்தனர். அதுபோல, ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எதிர் தரப்பினர் எடுக்கின்றனர்' என்றார்
அதற்கு மூத்த வக்கீல் விஜய்நாராயண், அரசியலில் அன்றாட நடவடிக்கை முக்கியமானது. கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, கட்சியின் நிலை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
என்ன நிலை?
அப்போது நீதிபதிகள், "அ.தி.மு.க.,வில் ஓ.பன்னீர்செல்வத்தின் தற்போதைய நிலை என்ன?" என்று கேள்வி கேட்டனர். அதற்கு மூத்த வக்கீல் மணிசங்கர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்று பதில் அளித்தார்.
உடனே நீதிபதிகள், "ஓ.பன்னீர்செல்வம் சொந்த கட்சிக்கு எதிராக சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்'' என்றனர்.
இதற்கு பதில் அளித்த மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், "ஓ.பன்னீர்செல்வம் மாணவர் பருவத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் உள்ளார். ஆனால், அவரை இவர்கள் நீக்கியுள்ளனர்'' என்றார்.
தீர்ப்புக்கு கட்டுப்பட்டது
இதையடுத்து நீதிபதிகள், "அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்துக்கு எதிராக எந்த ஒரு இடைக்கால உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது. இந்த மேல்முறையீட்டு வழக்குகள் வருகிற 20 மற்றும் 21-ந் தேதிகளில் விசாரிக்கப்படும். வழக்கின் இறுதி விசாரணை முடித்து தீர்ப்பு அளிக்கப்படும். அதுவரை அ.தி.மு.க.வில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவானாலும், அது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது'' என்று உத்தரவிட்டனர்.