அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல்


அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல்
x
தினத்தந்தி 29 Jun 2022 5:54 AM IST (Updated: 1 July 2022 4:29 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து உள்ளனர். மேலும் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்டு இருக்கிறார்கள்.

சென்னை,

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த 23-ந்தேதி நடந்தது.

இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தார்.

இடைக்கால தடை

தனது மனுவில், புதிய தீர்மானங்களை இயற்ற தடைக்கேட்ட மனுவை மட்டும் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை இயற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

தமிழ்மகன் உசேன்

இந்தநிலையில், ஐகோர்ட்டு உத்தரவை மீறி பொதுக்குழுவில் புதிய தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாக கூறி சண்முகம், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை நிராகரித்து விட்டனர். பின்னர், கட்சியின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நிரந்தரமாக நியமிப்பதாக எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றுவதாக பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அறிவித்தனர். அவை தலைவரை நியமிக்கும் இந்த தீர்மானம், ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களில் இடம் பெறவில்லை.

அவமதிப்பு

ஐகோர்ட்டு விதித்த தடை உத்தரவை மீறி இவர்கள் செயல்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என்ற அறிவிப்பும் சட்டவிரோதமாக வெளியிட்டனர். பொதுக்குழு கூடியது முதல் ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தை அவமதிக்கும் விதமாக கோஷங்களை சிலர் எழுப்பினர்.

பொதுக்குழு உறுப்பினர் சி.வி.சண்முகம், 23 தீர்மானங்களையும் பொதுக்குழுவில் ஒருமனதாக நிராகரிப்பதாக அறிவித்தார். கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என கூறி அதற்கான கோரிக்கை மனுவை அவைத்தலைவரிடம் கொடுத்தார். இதேபோல, பொதுக்குழு உறுப்பினர் கே.பி.முனுசாமியும் செயல்பட்டார். பின்னர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளையும் கலைத்து விட்டனர்.

தடை வேண்டும்

எனவே, கட்சியின் நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்து இயற்றப்பட்ட தீர்மானத்துக்கும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என்று சட்டவிரோதமாக வெளியிடப்பட்ட அறிவிப்புக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த ஐகோர்ட்டு உத்தரவை அவமதிக்கும் விதமாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story