மின்கட்டணம், பால் விலை உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது அ.தி.மு.க.அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் பேச்சு
மின்கட்டணம், பால் விலை உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது என்று அ.தி.மு.க.அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் கூறினார்.
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. உறையூர் பகுதி கழகம் சார்பில், சொத்துவரி, பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி உறையூர், குறத்தெருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் பூபதி தலைமை தாங்கினார். இதில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டி.ரத்தினவேல் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் வனிதா, வட்டச் செயலாளர்கள் மற்றும் டி.ஆர்.சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் பேசும்போது, தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி, பால்விலை, குடிநீர் வரி உயர்வு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக அடித்தட்டு, நடுத்தர மற்றும் மாத சம்பளம் வாங்கும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வீடுகள்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என கூறினர். ஆனால் இன்று வரை அது வழங்கப்படவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பொங்கல் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. காலையில் பத்திரிகைகளை புரட்டிப் பார்த்தால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என சட்ட ஒழுங்கு பிரச்சினை தொடர்பான செய்திகளாகத்தான் உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது மட்டுமல்லாமல் விலைவாசியும் கட்டுக்குள் இருந்தது. மேலும் மின்மிகை மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்தது. அவரது ஆட்சிக் காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. குடிமராமத்து செய்து விவசாயிகளின் உற்ற நண்பாகவும் அவர் திகழ்ந்தார் என்றார்.