புதுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் புதுக்கோட்டையில் வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் 'நீட்' தேர்வு ரத்து என அறிவித்தார்கள். ஆனால் 'நீட்' தேர்வு ரத்தாகிவிட்டதா?. குடும்ப பெண்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை கொடுத்தார்களா?. தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கப்படவில்லை. தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளார்கள். தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் மின்சார கட்டணம், பால் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் மின்சார, பஸ் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்த்தப்படுகிறது. காவிரி, கொள்ளிடம் உபரிநீர் திட்டம் முடங்கி போய் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வருவது உறுதி. எதுவாக இருந்தாலும் சட்டப்போராட்டத்தில் வென்று காட்டுவோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தல் வந்துவிடும் என தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது'' என்றார். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து உள்பட நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.