அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் -கே.பி.முனுசாமி பேட்டி
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி வருகிற 23-ந் தேதி நடைபெறும் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
பூந்தமல்லி,
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்தின் உள்ளேயும், வெளியேயும் அலங்கார வளைவுகள், கட்-அவுட் அமைப்பதற்காக சாரம் கட்டுவது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், பெஞ்சமின், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் நிருபர்களிடம் கே.பி. முனுசாமி கூறியதாவது:-
திட்டமிட்டபடி நடக்கும்
வருகிற 23-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் என அனைவருக்கும் முறையாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் கடிதங்கள் பெற்று கொண்டதற்கான அத்தாட்சிகளும் தலைமை கழகத்துக்கு வந்துள்ளது.
எனவே திட்டமிட்டபடி 23-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடைபெறும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து இதுவரை எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆணையின் பேரில் நடைபெற்றது.
அதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் "கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுக்குழுவை கூட்ட முடியவில்லை. தற்போது கட்சி உட்கட்சி தேர்தல் முடிந்து உள்ளது. இதனை பொதுக்குழுவில் முறையாக அங்கீகாரம் பெற்று தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் சிறப்பு அழைப்பாளர்கள் யாரையும் அனுமதிக்ககூடாது. பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் அழைத்து தீர்மானம் நிறைவேற்றி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என முடிவு எடுக்கப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
களங்கம் ஏற்படுத்த முயற்சி
நாளைக்கு ஆட்சிக்கு வர தங்களை தயார்படுத்தி கொண்டிருக்கிற இயக்கத்தை, சில சந்தர்ப்ப வாதிகள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அ.தி. மு.க.வுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். காலம் அவர்களுக்கு சரியான தண்டனை வழங்கும்.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் இந்த கூட்டம் நடைபெறாது. பொதுக்குழுவில் கொண்டுவரப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து கமிட்டி கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கையெழுத்திட்டுள்ளார். இந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வார். தனது கருத்துகளை சொல்லுவார். தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அந்த தீர்மானங்களை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் தொண்டர்கள் என நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வோம். பொதுக்குழு குறித்த தகவல் வெளியானபோது 2 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் குறிப்பிட்ட இந்த தேதியில்தான் பொதுக்குழுவை நடத்த வேண்டும் என கடிதம் எழுதினார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.5 கோடி நில மோசடி வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவ்வப்போது ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். அந்த வகையில் அவர் நேற்று 9-வது முறையாக ஆஜராகி கையெழுத்திட்டார்.
இதைத்தொடர்ந்து கமிஷனர் அலுவலக வளாகத்தில் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எம்.பி. பதவி
நான் ஓ.பி.எஸ். பக்கமா? இ.பி.எஸ்.பக்கமா? என்று கேட்டால் அது ரகசியமானது. ஆனால் எனக்கு கட்சிதான் முக்கியம். நான் கட்சி பக்கம் தான் இருப்பேன். வாழ்நாள் முழுவதையும் தி.மு.க.வை எதிர்ப்பதைதான் கொள்கையாக கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் எங்களுக்கு கட்சிதான் முக்கியம். பதவி என்பது தேவையில்லை. நான் ராஜ்யசபா எம்.பி. பதவியை எதிர்பார்க்கவில்லை.
ஓரம்கட்டும் எண்ணம் இல்லை
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது. எல்லாம் சரியானது போன்று தற்போதும் சுமுக முடிவு ஏற்படும். இந்திய அரசியலமைப்பு சட்டமே 100-க்கும் மேற்பட்ட முறை திருத்தப்பட்டுள்ளது.
கட்சிக்கு உச்சபட்ச அதிகாரம் படைத்தது பொதுக்குழு. எனவே இந்த பொதுக்குழுவில் விதியை திருத்தலாம். மாற்றலாம். புதிய விதியை கொண்டு வரலாம். ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை. கட்சியை பொறுத்தவரையில் ஒற்றை தலைமை வேண்டும் என்பதுதான் முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.
மகளிர் அணி ஆதரவு
ஒற்றை தலைமை விவகாரம் அ.தி.மு.க.வை உலுக்கி எடுத்து வரும் நிலையில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நேற்றும் தனது ஆதரவாளர்களை சந்தித்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் நேரில் சந்தித்து மகளிர் அணி சார்பில் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.