அ.தி.மு.க. பிரமுகரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
குத்தாலம் அருகே அ.தி.மு.க. பிரமுகரின் மோட்டார் சைக்கிள் திருட்டு சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகிறது
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மல்லியம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அபுதாகீர்(வயது 33). அ.தி.மு.க. ஒன்றிய மாணவரணி செயலாளராக பதவி வகித்து வரும் இவர் நேற்று முன்தினம் வீட்டு வாசலில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ அதனை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அபுதாகீர், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டார். அதில், மோட்டார் சைக்கிளை 2 மர்ம நபர்கள் திருடி செல்வது பதிவாகியிருந்தது. இதுகுறித்து குத்தாலம் போலீசில் அவர் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தநிலையில் அபுதாகீர் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.