அ.தி.மு.க. பிரமுகர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
அ.தி.மு.க. பிரமுகர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில், இடப்பிரச்சினை காரணமாக அ.தி.மு.க. பிரமுகர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு காணப்பட்டது.
அ.தி.மு.க. பிரமுகர்
தஞ்சை பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 53). அ.தி.மு.க. பிரமுகர். இவருடைய மனைவி தாமரைக்கனி. இவர்களுடைய மகன்கள் அய்யப்பன். விக்னேஷ். இவர்கள் அனைவரும் ஒரே பகுதியில் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் வசித்து வரும் பகுதியில் உள்ள இடப்பிரச்சினை தொடர்பாக மகேந்திரனுக்கும், இன்னொரு தரப்பினருக்கும் இடையே கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் மகேந்திரனுக்கு எதிராக இடத்தை கையப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருட்களை அகற்றினர்
இதையடுத்து எதிர்தரப்பினர், கோர்ட்டு அமீனாவுடன் நேற்று காலை இடத்தை கையப்படுத்துவதற்காக வந்தனர். அப்போது மகேந்திரன் குடியிருந்து வரும் வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்தனர்.
அதற்கு மகேந்திரன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், கோர்ட்டு தீர்ப்புப்படி வீடு இருக்கும் இடம் கிடையாது என்றும், அதற்கு அருகில் உள்ள இடம்தான் என்றும் அதனை சர்வேயர் வைத்து அளந்து எடுத்துக்கொள்ளட்டும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி
மேலும் ஆத்திரம் அடைந்த மகேந்திரன் தனது மனைவி மற்றும் 2 மகன்கள், உறவினரான கிருஷ்ணன் ஆகிய 5 பேரும் கேனில் இருந்த பெட்ரோலை தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனைப்பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை காப்பாற்றினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.