'தி.மு.க ஆட்சியின் குறைகளை மறைக்க அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய்வழக்கு


தி.மு.க ஆட்சியின் குறைகளை மறைக்க அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய்வழக்கு
x
தினத்தந்தி 17 Sept 2022 12:30 AM IST (Updated: 17 Sept 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க ஆட்சியின் குறைகளை மறைக்க அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்படுவதாக, முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.

திண்டுக்கல்

மின்கட்டண உயர்வை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள பொன்னகரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியின் பெருமை, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களுக்கு தெரிகிறது. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தாலிக்கு தங்கம் திட்டத்தை அ.தி.மு.க. கொண்டு வந்தது. அதை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.

அதேபோல் மாணவர்களுக்கு மடிக்கணினி, உழைக்கும் பெண்களுக்கு ஸ்கூட்டர், குழந்தை பரிசு பெட்டகம் உள்பட ஏழை மக்கள் பயன்பெற்ற பல திட்டங்களை தி.மு.க. நிறுத்திவிட்டது. இதுமட்டுமின்றி மக்கள் மீது தி.மு.க. வரியை சுமத்துகிறது. ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தற்போது தான் மீண்டு வருகின்றனர். அதற்குள் குருவி தலையில் பனங்காயை வைத்தது போல் மக்கள் தாங்க முடியாத வகையில் நிதி சுமையை சுமத்துகின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஓராண்டில் சொத்துவரி, மின்கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி இருக்கிறது.

மக்கள் விரோத ஆட்சி

இதனால் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள், வணிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே மின்சார கட்டண உயர்வை தி.மு.க. அரசு திரும்ப பெற வேண்டும். அதுவரை மக்களின் நலனுக்காக அ.தி.மு.க. போராட்டம் நடத்தி கொண்டே இருக்கும்.

தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் அறிவித்த எந்த வாக்குறுதிகளையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை.

சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும். முதல்-அமைச்சர் செயல்படாத நிலையில் இருக்கிறார். இதனால் சினிமாத்துறைக்கு ஒரு முதல்-அமைச்சர், ரியல் எஸ்டேட்டுக்கு ஒரு முதல்-அமைச்சர், முதல்-அமைச்சரை இயக்குவதற்கு ஒரு முதல்-அமைச்சர் என பல முதல்-அமைச்சர்கள் உள்ளனர். தி.மு.க. ஆட்சியின் குறைகளை மறைப்பதற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. பொய் வழக்குகள் அ.தி.மு.க.வை செயல்பாட்டை பாதிக்காது. மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடும்.

இவ்வாறு நத்தம் விசுவநாதன் பேசினார்.

முடிந்து போன சகாப்தம்

முடிவில் நத்தம் விசுவநாதன், நிருபர்களிடம் கூறுகையில், சசிகலாவை பொறுத்தவரை முடிந்து போன சகாப்தம். அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் அவரை பற்றி நினைக்கவே இல்லை. எனவே திரும்ப நினைவுபடுத்த வேண்டியது இல்லை. அதற்கு பதில் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நானும் ரவுடி தான் என்று வடிவேலு கூறியது போன்று அவர் பொதுச்செயலாளர் என்று கூறி வருகிறார். அவருடைய ஆசைக்கு சொல்லிவிட்டு போகட்டும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும். அ.தி.மு.க. உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார், என்றார்.



Next Story