அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு


அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு
x

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட்டு இன்று வழங்குகிறது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி நடந்தது. இந்த கூட்டம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதே கோரிக்கையுடன் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

மீண்டும் விசாரணை

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கை ஐகோர்ட்டு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு பட்டியலிடப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி, இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு பட்டியலிடப்பட்டது.

இன்று தீர்ப்பு

இந்த வழக்கை கடந்த 10 மற்றும் 11-ந்தேதிகளில் நீதிபதி விசாரித்தார். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று (புதன்கிழமை) பிறப்பிக்கிறார். அதாவது காலை 10.30 மணிக்கு 20 அவசர வழக்குகளை விசாரித்து முடித்த பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி பிறப்பிப்பார் என்று ஐகோர்ட்டு வெளியிட்டுள்ள வழக்கு விசாரணை பட்டியலில் கூறப்பட்டுள்ளது.


Next Story