10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. பணியை சரியாக செய்யாததால் மழைநீர் தேங்குகிறது -அமைச்சர் பேட்டி


10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. பணியை சரியாக செய்யாததால் மழைநீர் தேங்குகிறது -அமைச்சர் பேட்டி
x

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. தனது பணியை சரியாக செய்யாததால் மழைநீர் தேங்குகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சாந்தி, கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பலியானார். அவரது குடும்பத்தினரிடம், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று வழங்கினர். இதேபோல, மின் விபத்தில் பலியான பெரம்பூரில் உள்ள பி.பி.காலனியை சேர்ந்த தேவேந்திரன் குடும்பத்தினருக்கும் ரூ.4 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர்கள் கொடுத்தனர். அப்போது, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில், அம்பேத்கர் நகர் முத்து மாரியம்மன் கோவிலில் இலவச மருத்துவ முகாமை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

வெள்ளநீர் அகற்றும் பணி

இதையடுத்து கே.என்.நேரு, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நேற்று (நேற்று முன்தினம்) பல இடங்களில் தேங்கியிருந்த வெள்ளநீர் அகற்றப்பட்டுவிட்டது. அன்று இரவு மேலும் மழை பெய்தபோது, ஏற்கனவே தண்ணீர் நின்ற இடங்களிலும், புதிதாக கால்வாய் கட்டாத இடங்களிலும் தேங்கியிருந்த வெள்ளநீரை மோட்டார் வைத்து முழுமையாக அகற்றும் பணி நடந்துக்கொண்டிருக்கிறது. வெள்ளநீர் வெளியேற்றப்பட்ட பின்னர், அங்கு படிந்திருக்கும் சேறு, சகதி அகற்றப்படுகிறது. இதற்கான பணியை மாநகராட்சி, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றன. தி.மு.க. சார்பில் 4 இடங்களில் பெரிய அளவில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

சாலைகள் செப்பனிடப்படும்

தேங்கிய வெள்ளநீரை அகற்றும் பணி முடிந்துவிட்டது. மழைக்காலம் முடிந்த பிறகு சென்னையில் இருக்கும் சாலைகளை முழுவதுமாக புதுப்பிப்பதற்கு முதல்-அமைச்சர் நிதியை ஒதுக்கி தந்திருக்கிறார். அதன்படி, மழை முடிந்த பின்னர் சாலைகள் செப்பனிடப்படும்.

10 ஆண்டு காலம் அ.தி.மு.க. சரியாக பணியாற்றியிருந்தால், கடந்த ஆண்டு வெள்ளம் எப்படி சென்னையை பாதித்திருக்கும்? தூர்வாரும் பணியை அ.தி.மு.க. செய்யவே இல்லை. அதனால்தான் கடந்த ஆண்டு சென்னை மோசமாக பாதித்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கி தந்து, மழைநீர் வடிகால்வாய் கட்டமைக்கும் பணியை செய்ததால் தான் மத்திய சென்னை, தென்சென்னை பகுதிகளில் அறவே வெள்ளநீர் தேங்கவில்லை. வடசென்னையில் திரு.வி.க.நகர், கொளத்தூர் பகுதிகளில் இருக்கும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் நிற்கிறது. ஓட்டேரி கால்வாய் நிரம்பி செல்வதாலேயே, மழைநீர் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது.

அவர்கள் (அ.தி.மு.க.) செய்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால் பிள்ளையார் சுழி போட்டு, நிதி ஒதுக்கி செய்தது நமது முதல்-அமைச்சர். அ.தி.மு.க. எதுவும் செய்யாததால்தான் மழைநீர் தேங்கியது. நாங்கள் பணிகளை செய்ததால் வெள்ளநீர் வடிந்திருக்கிறது. முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்திருந்தால், நீதிமன்றத்தின் மூலமாக நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு கே.என்.நேரு தெரிவித்தார்.


Next Story