வாலிபர் 50 ஆயிரம் கிலோ மீட்டர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்


வாலிபர் 50 ஆயிரம் கிலோ மீட்டர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
x

பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி 50 ஆயிரம் கிலோ மீட்டர் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை வாலிபர் மேற்கொண்டு வருகிறார். வேலூர் வந்த அவருக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

வேலூர்

வாலிபர் சைக்கிள் பயணம்

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் குர்ரம்பெஞ்சாலா சைதன்யா (வயது 22). இவர் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் அதன் மறுசுழற்சியை வலியுறுத்தி நெல்லூரியில் இருந்து இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் வழியாக 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வேலூர் மாவட்டத்துக்கு வருகை தந்தார். அவருக்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மரம் நடுதலை வலியுறுத்தி கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை நெல்லூர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். மேலும் அதே ஆண்டில் உணவை வீணாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நெல்லூரில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டேன். தற்போது பிளாஸ்டிக் மறுசுழற்சியை வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. அதன் புழக்கத்தை தவிர்க்க முடியாமல் உள்ள நிலையில் அதை மறு சுழற்சி மூலம் மாசை கட்டுப்படுத்த முடியும்.

50 ஆயிரம் கிலோ மீட்டர்

இதை மையமாகக் கொண்டு சைக்கிள் பயணத்தை தொடங்கி உள்ளேன். 625 நாட்கள் நடைபெறும் இந்த சைக்கிள் பயணத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 30 மாநிலங்களில் 50 ஆயிரம் கிலோ மீட்டர் பணயம் மேற்கொண்டு வருகிறேன். நெல்லூரில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story