பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி;உடன்சென்ற நண்பரும் உயிரிழந்தார்


தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி, தூக்கி வீசப்பட்ட வாலிபர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார். உடன் சென்ற நண்பரும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

தடுப்புச்சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி, தூக்கி வீசப்பட்ட வாலிபர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார். உடன் சென்ற நண்பரும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.

தடுப்புச்சுவரில் மோதியது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் படப்படி தெருவை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மகன் சரவணன் (வயது 24). அதே பகுதியை சேர்ந்த தயாளன் என்பவருடைய மகன் கவுதம் (24).

சரவணனும், கவுதமும் கொத்தனாராக வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் இருவரும் திருப்பரங்குன்றத்தில் இருந்து திருநகரை நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றனர்.

வெயில் உகந்த அம்மன் கோவில் அருகே சென்றபோது திடீரென மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மத்தியில் தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு மறுபுறம் உள்ள சாலையில் போய் விழுந்தனர்.

2 பேரும் பலி

அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சின் சக்கரத்தில் கவுதம் சிக்கினார். சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். சரவணன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரவணனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரவணனும் பரிதாபமாக இறந்தார்.

இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story