எச்சரிக்கையை மீறி ஆழமான இடத்தில் குளிக்கும் வாலிபர்கள்
கோபி கொடிவேரி அணையில் எச்சரிக்கையை மீறி ஆழமான இடத்தில் வாலிபர்கள் குளிக்கிறார்கள். அவர்களை கண்காணித்து தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபி கொடிவேரி அணையில் எச்சரிக்கையை மீறி ஆழமான இடத்தில் வாலிபர்கள் குளிக்கிறார்கள். அவர்களை கண்காணித்து தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடிவேரி தடுப்பணை
கோபி கொடிவேரி தடுப்பணை சிறந்த சுற்றுலா தலமாகும். சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அணைக்கு குளித்து மகிழ வருவார்கள். வெளிமாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் அங்கு விற்கப்படும் மீன்களை வாங்கி சுவைப்பார்கள். பின்னர் குழந்தைகளோடு பூங்காவில் நேரத்தை செலவிட்டு மகிழ்வார்கள்.
இந்தநிலையில் அணையின் அருவிகளில் இருந்து தண்ணீர் கொட்டும் சில பகுதிகளில் தரைத்தளம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது. இதனால் சில இடங்களில் குழியாக காணப்படுகின்றன.
கண்காணிக்க வேண்டுகோள்
வெளியூர்களில் இருந்து வரும் வாலிபர்கள் குழி இருப்பது தெரியாமல் அதில் இறங்கி ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.
அபாயமான இடங்களில் செல்லவேண்டாம் என்று பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அணையை ஒட்டியுள்ள ஆபத்தான இடங்களுக்கு செல்லும் வழித்தடங்களும் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் கும்பலாக வரும் வாலிபர்கள் அணையை ஒட்டியுள்ள வாழைத்தோட்டங்களுக்கு செல்லும் வழியில் நுழைந்து அணையின் ஆழமான பகுதிக்கு சென்றுவிடுகிறார்கள். எனவே அணையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் யாரும் நுழையாதவாறு கோபி, பங்களாப்புதூர் போலீசாரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்காணித்து தடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.