முன்வைப்பு தொகையை கலெக்டர் செலுத்தினார் - 27 பழங்குடியினர் வீடுகளுக்கு மின் இணைப்பு


முன்வைப்பு தொகையை கலெக்டர் செலுத்தினார் - 27 பழங்குடியினர் வீடுகளுக்கு மின் இணைப்பு
x

உசிலம்பட்டி அருகே வசிக்கும் பழங்குடியினர் 27 பேரின் வீடுகளுக்கு மின் இணைப்புக்கான முன்வைப்பு தொகையை செலுத்தினர்.

மதுரை

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே வசிக்கும் பழங்குடியினர் 27 பேரின் வீடுகளுக்கு மின் இணைப்புக்கான முன்வைப்பு தொகையை செலுத்தினர்.

கடனுதவி

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சிநகரில் 53 பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இதில், 88 ஆண்கள், 94 பெண்கள், 32 சிறுவர்கள், 37 சிறுமிகள் ஆகியோர் உள்ளனர். அதில் 62 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டா, 22 நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 1000 பெறுவதற்கான ஆணை, 53 நபர்களுக்கு குடும்ப அட்டைகள், 48 நபர்களுக்கு வன உரிமை அடையாள அட்டை, சாதிச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடிப்படை சான்றுகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் நோக்கில் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்புக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த பகுதியில் மூலிகை தோட்டம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

மின் இணைப்புகள்

குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் தங்களது குடியிருப்புகளுக்கு மின் இணைப்புக்கான வைப்புத் தொகை செலுத்துவதற்கு இயலாத ஏழ்மையான சூழ்நிலையில் தாங்கள் வசிப்பதாகவும், தங்களது குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் வழங்கிட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு கொண்டனர்.

அதன்படி கலெக்டர் அனிஷ்சேகர், அரசின் சிறப்பு திட்ட நிதியில் இருந்து குறிஞ்சி நகர் பகுதியிலுள்ள 27 பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு மின் இணைப்புக்கான முன்வைப்புத்தொகை செலுத்தினார். அதன்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலம் உடனடியாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. அந்த வீடுகளுக்கு கலெக்டர் நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களிடம் கலந்துரையாடினார்.

மேலும் பழங்குடி மக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை கலெக்டர் வழங்கினார். விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் சங்கரலிங்கம், தாசில்தார் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன், பொறியாளர் வினோத்குமார், மின்வாரிய உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story