பாய்மர படகில் கடல் வழி சாகச பயணம்


பாய்மர படகில் கடல் வழி சாகச பயணம்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:45 AM IST (Updated: 15 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து கோடியக்கரை வரை பெண் காவலர்கள் பாய்மர படகில் கடல் வழி சாகச பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

சென்னையில் இருந்து கோடியக்கரை வரை பெண் காவலர்கள் பாய்மர படகில் கடல் வழி சாகச பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாகச பயணம்

தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவல் படை தொடங்கி 50-வது பொன் விழா ஆண்டை தமிழக காவல் துறையினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பெண் காவலர்கள் கடல் வழியாக பாய்மர படகில் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாகச பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

சென்னை முதல் கோடியக்கரை வரை இந்த சாகச பயணத்தை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது. இந்த பயணத்திற்காக 25 பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பயிற்சி

அவர்களுக்கு கடந்த சில வாரங்களாக அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதையடுத்து சென்னை துறைமுகத்தில் இருந்து கடந்த 10-ந் தேதி அமைச்சர் உதயநிதி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்டோர் சாகச பயணத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த சாகச பயண குழுவினர் புதுச்சேரி, கடலூர் வழியாக நேற்று முன்தினம் இரவு காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு வந்தடைந்தனர். அவர்களை கலெக்டர் குலோத்துங்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

நாகை வழியாக...

பின்னர் நேற்று காலை காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து நாகை வழியாக கோடியக்கரைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நாகை கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், ஆகியோர் கலந்துகொண்டு, பெண் காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, வாழ்த்து தெரிவித்து, அங்கிருந்து கோடியக்கரைக்கு பாய்மர படகு சாகச பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சாகச பயண குழுவினர் கோடியக்கரை சென்று, மீண்டும் அங்கிருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு செல்ல உள்ளனர். இவர்கள் வருகிற 17-ந் தேதி சென்னை செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story