வடகிழக்கு பருவமழை தீவிரம்: பொதுமக்கள் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்-கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தல்


வடகிழக்கு பருவமழை தீவிரம்: பொதுமக்கள் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்-கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தல்
x

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், பொதுமக்கள் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தி உள்ளார்.

நாமக்கல்

நாமக்கல்:

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவ மழை தற்போது தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. இதில் இருந்து பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொது மக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், டெங்கு, மலேரியா, மஞ்சள் காமாலை, காலரா மற்றும் வாந்திபேதி போன்ற உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் நன்கு கொதித்து ஆறிய நீரினையே குடிநீராக பயன்படுத்த வேண்டும். அல்லது குளோரினேசன் செய்யப்பட்ட நீரினை மட்டுமே குடிக்க வேண்டும். சூடான உணவு பொருட்களை மட்டுமே உண்ண வேண்டும். பழைய கெட்டுபோன உணவு பொருட்களையும், ஈ மொய்த்த உணவு பொருட்களையும் தவிர்க்க வேண்டும். காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற நோய்கள் ஏற்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.

நோய் பரவும் அபாயம்

மழைக்காலங்களில் வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பயன்படுத்தாத உரல், டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவைகளில் மழைநீர் தேங்கினால் கொசுக்கள் உற்பத்தியாகும். இதனால் மலேரியா, டெங்கு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் விழிப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். தங்கள் பகுதியில் எவருக்கேனும் தொற்று நோய்கள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

கொரோனா தடுப்பூசி

கொரோனா நோய் பரவலை தடுக்க பொது மக்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முககவசம் அணிதல், கிருமி நாசினி கொண்டு கை கழுவுதல், 2 மீட்டர் தூரம் சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.

12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும். 18 வயது முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 2-வது தடுப்பூசி போட்ட 6 மாத இடைவெளிக்குபின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் இலவசமாக போடப்படுகிறது. பொது மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story