குமரியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க ஆலோசனை


குமரியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க ஆலோசனை
x

கோழி மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுப்பது குறித்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கோழி மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுப்பது குறித்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை கூட்டம்

கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் குமரி மாவட்டத்தில் கொட்டப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கை குறித்து கேரள மற்றும் குமரி மாவட்ட போலீசார் ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் திருவனந்தபுரம் போலீஸ் சூப்பிரண்டு ஷில்பா ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட வன அதிகாரி இளையராஜா, திருவனந்தபுரம் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசாருதீன் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மருத்துவ குழுவினர், சுகாதார அதிகாரிகள் மற்றும் இரு மாவட்ட போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மருத்துவ- கோழி கழிவுகள்

இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரிகிரண் பிரசாத், ஷில்பா ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கோழி மற்றும் மருத்துவ கழிவுகள் குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே கொட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக புகார்கள் வருகின்றன. இப்படி கொட்டப்படும் கழிவுகளை கட்டுப்படுத்தவும் இதில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதற்கான உரிமம் ரத்து செய்யப்படும்.

கண்காணிப்பு குழு

முக்கியமாக இரு மாவட்ட போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் உதவிகளுடன் ஒரு குழு அமைக்கப்படும். இந்த குழுவில் இரு மாவட்ட போலீசார், சுகாதார பணியாளர்கள், மாசுக்கட்டுப்பாட்டு மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்பட சில அரசு அதிகாரிகளும் ஈடுபடுத்த உள்ளனர். இது தொடர்பாக அறிக்கை தயாரித்து இரு மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. இந்த குழுவினர் டாஸ்க் போர்ஸ் (திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளடக்கிய குழு) என்றும் அழைக்கப்படுவார்கள். அதேசமயம் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தி செல்வதை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த கடத்தலை தடுக்க இரு மாவட்ட போலீசார் இணைந்து செயல்படும். அதேசமயம் குமரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கேரளாவிற்கு தப்பி உள்ளனர். அதே போன்று கேரளாவில் இருந்தும் சிலர் தப்பி குமரி மாவட்டத்தில் தலைமறைவாக உள்ளனர். இத்தகைய குற்ற செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக வாழும் நபர்களை கண்டுபிடிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story