தத்தெடுப்பு குறித்து செவிலியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை
சட்டப்படியான தத்தெடுப்பு குறித்து கிராமங்களில் சுகாதார ெசவிலியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.
சட்டப்படியான தத்தெடுப்பு குறித்து கிராமங்களில் சுகாதார ெசவிலியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.
செவிலியர்களுக்கு பயிற்சி
திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் எஸ்.ஆர்.டி.பி.எஸ். சிறப்பு தத்தெடுப்பு மையம் இணைந்து சட்டப்படியாக தத்தெடுத்தல் விதிமுறைகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக தத்தெடுத்தலை தடுத்தல் குறித்து கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஒருநாள் பயிற்சியை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்குனர் தமிழரசி வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கிராம மக்களிடம்...
தத்தெடுப்பு என்பது வருத்தமான விஷயம். ஆனால் அதன் பின்னர் அந்தக் குழந்தையின் வாழ்க்கை மேம்படுவதைப் பார்க்கும் போது மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தும். சட்டப்படியான தத்தெடுப்பு என்றால் என்ன என்பதை கிராம சுகாதார செவிலியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதை கிராமங்களுக்கு நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். சட்டப்படியான தத்தெடுப்பு இல்லையென்றால், பல பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படும். இதற்காக மத்திய அரசு பல விதிகளை உருவாக்கியுள்ளது. அதன்படிதான் நாம் செய்ய வேண்டும்.
சேலத்தில் நான் பணியாற்றிய போது, அங்கு சட்டத்துக்கு உட்படாமல் முறையற்ற வகையில் குழந்தையை தத்தெடுத்த நிகழ்வு ஒன்றை நேரில் பார்த்து, அதை மீட்டுள்ளேன். அந்தக் குழந்தை உடலில் 33 இடங்களில் காயம், காலில் எலும்பு வெளியே தெரிந்தது. அதை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்து, அந்தக் குழந்தை சரியாகும் வரையில் நான் இரவு துங்கியதில்லை. அதற்கு முக்கிய காரணம் சட்டப்படி தத்தெடுக்காததுதான்.
இங்கு உங்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளை நீங்கள் பணியாற்றும் கிராம மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சியில் மாவட்ட மனநல மருத்துவர் பிரபாவராணி, குழந்தைகள் நலக்குழு தலைவர் வேதநாயகம், நன்னடத்தை அலுவலர் ஏகாம்பரம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமூக பணியாளர் மங்களக்குமார் நன்றி கூறினார்.