மாநில கல்வி கொள்கை குறித்து இ-மெயிலில் ஆலோசனை அனுப்பலாம்; முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தகவல்


மாநில கல்வி கொள்கை குறித்து இ-மெயிலில் ஆலோசனை அனுப்பலாம்; முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தகவல்
x

மாநில கல்வி கொள்கை தொடர்பாக கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை இ-மெயிலில் அனுப்பலாம் என்று நெல்லையில் நடந்த முதல் கருத்து கேட்பு கூட்டத்தில் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் கூறினார்.

திருநெல்வேலி

மாநில கல்வி கொள்கை தொடர்பாக கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை இ-மெயிலில் அனுப்பலாம் என்று நெல்லையில் நடந்த முதல் கருத்து கேட்பு கூட்டத்தில் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் கூறினார்.

கருத்து கேட்பு கூட்டம்

தமிழகத்தில் மாநிலத்துக்கு என்று தனித்துவமாக மாநில கல்வி கொள்கை ஏற்படுத்துவதற்காக, தமிழக அரசு உத்தரவுப்படி ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாநில கல்வி கொள்கை தொடர்பாக முதல் கருத்து கேட்பு கூட்டம் நெல்லை மண்டல அளவில் நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கல்வியாளர்கள், மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் பேசியதாவது:-

அரசிடம் அறிக்கை தாக்கல்

தனித்துவமான மாநில கல்வி கொள்கை உருவாக்குவதற்கு அரசு மூலம் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு சார்பில் தமிழகத்தில் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டு, அதில் நெல்லை மண்டலத்தில் முதல் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துகள் சிறப்பாக இருந்தன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் எந்தவிதமான மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்பது குறித்தும், ஆசிரியர்கள் திறன் மேம்பாடு உள்பட பல்வேறு கருத்துகளையும் தெரிவித்தனர்.

இதுபோன்று மீதமுள்ள 7 மண்டலங்களிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். இறுதியாக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இ-மெயில் முகவரி

மாநில கல்வி கொள்கை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை stateeducationpolicy@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். இதுதவிர சென்டர் பார் எக்சலன்ஸ் கட்டிடம், 3-வது மாடி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-600025 என்ற முகவரிக்கும் அனுப்பலாம். இதற்கு வருகிற அக்டோபர் மாதம் 15-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் சவிதா, பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன், பேராசிரியர்கள் சுல்தான் அகமத் இஸ்மாயில், ராம சீனுவாசன், முன்னாள் கல்வியாளர் அருணா ரத்னம், மாநில உயர்மட்ட கல்விக்குழு உறுப்பினர் ஆர்.பாலு, அகரம் கல்வி குழும உறுப்பினர் ஜெயஸ்ரீ தாமோதரன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நெல்லை சுபாஷினி, தென்காசி கபீர், தூத்துக்குடி பால தண்டாயுதபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story