தூத்துக்குடியில்புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை
தூத்துக்குடியில்புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடியில் புத்தகத்திருவிழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினார்.
புத்தக திருவிழா
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் புத்தக திருவிழாக்களை நடத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா வருகிற 22-ந் தேதி முதல் 29-ம் தேதி வரை எட்டயபுரம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதனை தொடர்ந்து புத்தக திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் கி.செந்தில் ராஜ் நேற்று ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்து துறைகள் சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.
சொற்பொழிவுகள்
இந்த புத்தக திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெற உள்ளன. அதேபோல, கலை இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற ஏதுவாக சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், தினமும் பல்வேறு தலைப்புகளில் பேச்சாளர்கள், எழுத்தாளர்களின் சிறப்பு சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.