மு.க.ஸ்டாலின் வருகை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை


மு.க.ஸ்டாலின் வருகை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 2 Jun 2023 1:00 AM IST (Updated: 2 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சேலத்திற்கு வருகிற 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

முன்னேற்பாடு பணிகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சேலம் வருகிறார். இதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தொடர்ந்து பல திட்டங்கள் தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந் தேதி சேலம் வருகிறார்.

மேட்டூர் அணை

அதன்படி 11-ந் தேதி சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவச்சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஈரடுக்கு பழைய பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். பின்னர் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.

12-ந் தேதி காலை காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story