வினியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தின் கீழ்முதன்மை பதப்படுத்தும் நிலைய பங்கேற்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்
வினியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தின் கீழ் முதன்மை பதப்படுத்தும் நிலைய பங்கேற்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைசார்பில் விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வினியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான முதன்மை பதப்படுத்தும் நிலையங்களுக்கான பங்கேற்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்கள், தனியார் உணவு பதப்படுத்துவோர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சத்தியமூர்த்தி வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குனர்கள் திருவண்ணாமலை ஹரிகுமார், விழுப்புரம் கணேசன், வேளாண்மை துணை இயக்குனர் நிர்மலா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இக்கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் ஒலக்கூர் வட்டாரம் ஓங்கூரில் 5 ஆயிரம் சதுர அடியில் பல்நோக்கு முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதப்படுத்துவதற்கான இடம், குளிர் பதன கிடங்கு, சுத்தப்படுத்துவதற்கான இடம், அலுவலக கட்டிடம் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல் வானூர் வட்டாரம் மாத்தூரில் முந்திரி அதிகளவில் பயிரிடப்படுவதால் முந்திரி பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பலா, முந்திரிக்காக பண்ருட்டியிலும், பல்நோக்கு பயிர்களுக்காக குறிஞ்சிப்பாடியிலும் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் படவேடு, குப்பநத்தம் ஆகிய இடங்களில் வாழையில் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பதப்படுத்தும் நிலையங்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தனியார் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், பதப்படுத்துவோர் உள்ளிட்டோருக்கு ஒப்பந்த முறையில் அல்லது வாடகைக்கு எடுத்து நடத்தும் வகையில் வழங்கப்படும் என்றும், இந்த முதன்மை பதப்படுத்தும் நிலையங்களை எடுத்து நடத்த விரும்புபவர்கள் ஒப்பந்தத்தில் பங்கேற்க வேளாண்மை துணை இயக்குனர், வேளாண் வணிக செயலாளர், விழுப்புரம் விற்பனைக்குழு உள்ளிட்டோரை அணுகலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.