ஆலோசனை கூட்டம்
ஆயக்குடியில் கொய்யா சந்தைப்படுத்துதல் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
பழனி வட்டார தோட்டக்கலை துறை சார்பில், கொய்யா விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஆயக்குடியில் நடைபெற்றது. இதற்கு உதவி இயக்குனர் பாலகுமார் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் கிருஷ்ணகுமார் (வணிகம்), தோட்டக்கலை துணை அலுவலர் ரத்தினவேல், உதவி அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆயக்குடியை சேர்ந்த கொய்யா உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகள், கொய்யா விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின்போது, ஆயக்குடியில் கொய்யா சீசன் நிலவுவதால் வரத்து அதிகமாக உள்ளது. அதேவேளையில் அதன் விலை சரிந்துள்ளது. எனவே ஆயக்குடியில் கொய்யா பழக்கூழ் ஆலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அதிகாரிகள் பேசும்போது, கொய்யா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் 'இ-நாம்' எனப்படும் தேசிய வேளாண் சந்தையில் கொய்யாவை எவ்வாறு வணிகப்படுத்துவது, கொய்யா சந்தைப்படுத்துதலில் உள்ள வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.