வக்கீல்கள் 2-வது நாளாக சாலை மறியல்
புதுக்கோட்டையில் வக்கீல்கள் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
கொலை மிரட்டல் புகார்
புதுக்கோட்டையை சேர்ந்த வக்கீல் கலீல் ரகுமான். இவர் கடந்த 2-ந் தேதி கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கு ஒன்றில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தனது கட்சிக்காரர் பெண் தரப்பிற்காக ஆஜராகியிருக்கிறார். அப்போது அந்த பெண்ணின் கணவரான சவேரியார்பட்டினத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ், வக்கீல் கலீல் ரகுமானை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து, தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் வக்கீல் கலீல்ரகுமான் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஆரோக்கியராஜை கைது செய்யக்கோரி நேற்று முன்தினம் புதுக்கோட்டை கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் கைது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் போலீசார் தெரிவித்தப்படி ஆரோக்கியராஜை நேற்று காலைக்குள் கைது செய்யவில்லை எனவும், அவரை கைது செய்யக்கோரியும், விசாரணை அதிகாரியான திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவை சந்தித்து மனு கொடுப்பதற்காக புதுக்கோட்டை கோர்ட்டில் இருந்து வக்கீல் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரும்பு தடுப்புகள் வைத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே தடுப்பு ஏற்படுத்தினர். இதனால் வக்கீல்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மனு கொடுக்க வந்ததை தடுத்து நிறுத்தியதால் வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 2-வது நாளாக வக்கீல்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பானது.
ஓட்டலில் இருந்து வந்த மதிய உணவு
போலீஸ் சூப்பிரண்டு நேரில் வந்து எங்களது கோரிக்கையை கேட்க வேண்டும் என வக்கீல்கள் கூறினர். குறிப்பிட்ட 5 நபர்கள் மட்டும் போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து மனு கொடுக்க போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் வக்கீல்கள் மறுத்ததோடு, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து வந்து நேரில் கேட்க வேண்டும் என்றனர். இதனால் போராட்டம் நீடித்தது. வக்கீல்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவதற்காக போர்வைகள் உடனடியாக வரவழைத்தனர்.
மேலும் மதிய உணவை ஓட்டலில் வாங்கி வந்து வக்கீல்கள் நடுரோட்டிலேயே அமர்ந்து சாப்பிட்டனர். தொடர்ந்து நாற்காலிகள் எடுத்து வரப்பட்டு சாலையில் போட்டு உட்கார்ந்தனர். இந்த போராட்டம் நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு மேலும் நீடித்தது. வக்கீல்களின் இந்த போராட்டத்தால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு உள்ள சாலையில் இரு புறமும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
பெண் சப்-இன்ஸ்பெக்டரை...
இந்த நிலையில் போராட்டம் நீடித்தால் சம்பந்தப்பட்ட நபர் 2 நாட்களுக்குள் கைது செய்யப்படுவார் எனவும், திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வக்கீல்கள் முன்பு சங்க நிர்வாகிகள் பேசி தங்களது போராட்டத்தை முடித்து கொள்வதாக தெரிவித்தனர். வக்கீல்களை போலீஸ் சூப்பிரண்டு சந்திக்காத நிலையில் போலீசார் தொடர்பான வழக்குகளில் வக்கீல்கள் ஆஜராக கூடாது என முடிவு செய்து அறிவித்தனர். தொடர்ந்து மாலை 4.50 மணிக்கு மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த நாற்காலிகளை எடுத்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் சுமார் 5 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது.
வக்கீல்கள் மீது வழக்குப்பதிவு
இந்த போராட்டத்தினால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மதிய உணவிற்காக முகாம் அலுவலகத்திற்கு செல்லாமல் அலுவலகத்தில் இருந்தே கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டார். வக்கீல்களின் போராட்டத்தால் புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நேற்று பரபரப்பாக காணப்பட்டது. புதுக்கோட்டை கோர்ட்டு முன்பு நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக வக்கீல்கள் மீது டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்
வக்கீல்கள் நேற்று நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டார். அதன்படி அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.