ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல்; புளியரையில் தீவிர கண்காணிப்பு


ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல்; புளியரையில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக, புளியரை சோதனைச்சாவடியில் கால்நடை மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி

நெல்லை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பி.வி.பொன்னுவேல் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல்

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் என்பது மிகவும் தொற்றக்கூடிய மற்றும் ஆபத்தான வைரஸ் நோயாகும். இது பன்றிகளில் ரத்தக்கசிவு, கடுமையான காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் அசாம் மாநிலத்தில் ஏராளமான பன்றிகள் இறந்துள்ளன. தற்போது நீலகிரி மாவட்ட முதுமலை புலிகள் காப்பகத்திலும் 28 காட்டுப்பன்றிகள் இறந்திருக்கின்றன.

பன்றி காய்ச்சல் வைரசனாது உண்ணி மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட விலங்குடன் நேரடி தொடர்பு இருந்தால் தொற்று ஏற்படலாம். மேலும் வைரசைக் கொண்ட பன்றி இறைச்சி பொருட்களை சாப்பிடுவதன் மூலமும் பரவுகிறது. ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம். அதிக காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல், சிவப்பு, கருமையான தோல் புண்கள், இருமல், சுவாசிப்பதில் சிரமம், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படும்.

சுகாதார நடவடிக்கைகள்

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதிகளில் பன்றி வளர்ப்பு பண்ணைகளில் நோய் புலனாய்வுப்பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ஜான் சுபாஷ் தலைமையில், கால்நடை மருத்துவக்குழு மூலம் தொடர் சோதனை மேற்கொண்டு உயர் பாதுகாப்பு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வளர்ப்பு பன்றிகளுக்கு இதுவரை ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் ஏதும் கண்டறியப்படவில்லை. அவ்வாறு அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மலையடிவாரங்களில் உள்ள வளர்ப்பு பன்றிகள் பண்ணையைச் சுற்றிலும் வேலி அமைத்து காட்டுப்பன்றிகள், பண்ணை அருகில் நுழையாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிது.

சோதனைச்சாவடி கண்காணிப்பு

கேரளா, தமிழ்நாடு எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியில் 24 மணிநேரமும் இரவு, பகலாக சுழற்சி முறையில் கால்நடை மருத்துவக்குழு மூலம் நோய் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர்கள் டாக்டர் மகேஸ்வரி, டாக்டர் ஆபிரகாம் ஜாப்ரி ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பன்றி வளர்ப்பு பண்ணைகளில் சோடியம் ஹைப்போகுளோரைட் அல்லது கால்சியம் ஹைப்போகுளோரைட் (பிளீச்சிங் பவுடர்) தெளிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. பண்ணை உரிமையாளர்கள் தாங்கள் வளர்க்கும் பன்றிகளை இந்த நோயின் தாக்கம் குறையும் வரை விற்பனைக்காக வெளியில் எடுத்துச் செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மீறுவோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நோய் பன்றிகளை மட்டுமே தாக்கக்கூடியது. மற்ற விலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ பரவாது. எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story