2 ஆண்டுகளுக்கு பிறகு கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுத பூஜை விற்பனை களைகட்டியது
2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜை விற்பனை களைகட்டியது. பொருட்களின் விலையும் அதிகரிக்காததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை,
சென்னை நகரின் பிரதான காய்கறி, பழ மற்றும் பூ சந்தையாக கோயம்பேடு மார்க்கெட் திகழ்ந்து வருகிறது. ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தை என்ற பெருமைக்குரிய கோயம்பேடு மார்க்கெட்டில் 1,200-க்கும் மேற்பட்ட மொத்த விலை கடைகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லரை விலை கடைகளும் அமைந்துள்ளன.
இங்கிருந்து சென்னை மாநகர் முழுவதும் காய்கறி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இதுதவிர திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் காய்கறி கொண்டு செல்லப்படுகின்றன. எல்லா நாட்களும் பரபரப்புடன் காணப்படும் இந்த மார்க்கெட்டில், பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
ஆயுத பூஜை பண்டிகை
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் மார்க்கெட்டில் பெரியளவில் கூட்டம் களைகட்டவில்லை. கோயம்பேடு என்றாலே கொரோனா என்று எண்ணும் அளவுக்கு மக்கள் இந்த பகுதியில் நடமாடவே மிரண்டனர். கொரோனா தீவிரம் குறைந்தும் கோயம்பேடு சந்தையில் இயல்பான மக்கள் கூட்டத்தை பார்க்க முடியவில்லை.
இந்த நிலையில் ஆயுதபூஜை பண்டிகையையொட்டி, கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தைகள் அமைக்கப்பட்டன. குறிப்பாக பழமார்க்கெட் முடியும் திசைப்பகுதிகளிலும், 4 மற்றும் 5-ம் எண் நுழைவுவாயிற்களிலும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு பொரி, அவல், கடலை, வாழை இலை, கரும்பு உள்ளிட்டவைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டன. இதுதவிர மார்க்கெட் வளாகத்தில் வாசனை திரவியங்கள் விற்பனை செய்யும் பகுதிகளிலும் பூஜைக்குரிய பொருட்களை ஒரு சேர வாங்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
2 ஆண்டுகளுக்கு பிறகு...
ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை பண்டிகை என்பது மார்க்கெட் வியாபாரிகளின் திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது. அந்தவகையில் பலத்த எதிர்பார்ப்புடன் ஆயுத பூஜை பண்டிகையை வியாபாரிகள் எதிர்நோக்கி இருந்தனர். ஆனால் வியாபாரிகளின் காத்திருப்பு வீண்போகவில்லை.
2 ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் வளாகம் மீண்டும் மக்கள் கூட்டத்தில் நிறைந்து காணப்பட்டது. அனைத்து கடைகளிலும் விற்பனையும் நன்றாக நடந்தது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து ஒருநாள் கடைகள் மூடியும், மறுநாள் கடைகள் திறந்தும் என சுழற்சி முறையில் வாழ்க்கையை ஓட்டி வந்த வியாபாரிகளுக்கு, இந்தாண்டு ஆயுதபூஜை விற்பனை நம்பிக்கையை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.
விலையில் மாற்றம் இல்லை
அதேவேளை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் காய்கறி-பழங்கள் மற்றும் பூஜை பொருட்களின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆனால் ஆப்பிள் விலை வீழ்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.200 தாண்டியும் விற்பனையான சிம்லா ஆப்பிள் தற்போது ரூ.80 முதல் 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களும் ஆர்வமாக ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகளையும், பூஜை பொருட்களையும் வாங்கி சென்றனர்.
அதேவேளை பூக்கள் விலை மற்றும் சற்று உயர்ந்து காணப்படுகிறது. அண்டை மாநிலங்களில் பெய்யும் மழை மற்றும் வரத்து பாதிப்பு எதிரொலியால் பூக்கள் விலை 10 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். கோயம்பேடு மார்க்கெட் போலவே வெளிச்சந்தைகளிலும் நேற்று மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
வியாபாரிகள் மகிழ்ச்சி
இதுகுறித்து கோயம்பேடு பழக்கடை வியாபாரி ஹேமந்த் ஜெயராமன் கூறியதாவது:-
முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இறைவன் அருளால் வியாபாரம் ஓரளவு நடந்திருக்கிறது. மக்களும் அதிகளவில் மார்க்கெட்டுக்கு வருகை தர தொடங்கிவிட்டார்கள். காய்கறி-பழ வகைகளின் விலையில் எந்தமாற்றமும் இல்லை. இதனால் பொதுமக்களும் ஆர்வமுடன் பொருட்களை வாங்கி செல்கிறார்கள். போக்குவரத்து செலவு, ஆட்கள் கூலி போன்றவற்றால் மார்க்கெட் விலையை காட்டிலும் வெளிச்சந்தைகளில் பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு சந்தை மூலம்..
திருவேற்காட்டை சேர்ந்த இல்லத்தரசி ஹேமமாலினி கார்த்திக் கூறியதாவது:-
ஆயுதபூஜை பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் பூஜை பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்க முடிந்தது. விலையும் அதிகரிக்காதது இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் மார்க்கெட் வளாகத்தை சுற்றி வாகன நெரிசல் நிறைய இருக்கிறது. இதனை கடந்து மார்க்கெட்டுக்கு வருவது சற்று சவாலாக அமைந்தது. மற்றபடி மீண்டும் கோயம்பேடு மக்கள் தைரியமாக உலா வரும் இடமாக மாறியிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.