20 ஆண்டுகளுக்குபின் மலை கிராமங்களில் நள்ளிரவில் நடந்த வினோத திருவிழா
ஒடுகத்தூர் அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு மலைகிராமங்களில் நள்ளிரவில் வினோத திருவிழா நடைபெற்றது.
வினோத திருவிழா
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கட்டுப்பாட்டில் 84 மலை கிராமங்கள் உள்ளது. ஒடுகத்தூர் அடுத்த பீஞ்ச மந்தை ஊராட்சியில் 47 குக்கிராமங்கள் உள்ளன. இதில் கட்டியாம்பட்டி, அரசன் கோரி, தண்டன், வரடி, நாடான் உள்ளிட்ட பல்வேறு பிரிவை சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஜமுனாமரத்தூர் மலை கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இப்பகுதி மலைவாழ் மக்கள் பீஞ்ச மந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியபட்டு கிராமத்தில் சுயம்புவாக அமைந்துள்ள பெருமாள் வடிவிலான புற்றை காலம்காலமாக தங்களின் முதல் கடவுளாக தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர்.
அதேபோல் மற்ற பகுதிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாவை போன்று இல்லாமல் பூஜை செய்யும் நபருக்கும், அவர் கூறும் ஊரில் உள்ள ஏதேனும் ஒரு காளைக்கும் ஒரே நேரத்தில் சாமி வந்து இருவரும் அருள்வாக்கு சொன்னால் மட்டுமே திருவிழா நடக்கும். இல்லையென்றால் அவர்களின் உத்தரவு வரும் வரை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருவிழா நடக்காது என்று கூறுகின்றனர்.
20 வருடம் கழித்து
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த 2003-ம் ஆண்டு நடத்தப்பட்ட திருவிழா சுமார் 20 வருடம் கழித்து திருவிழா நடத்த உத்தரவு கிடைத்தது. கடந்த 48 நாட்களுக்கு முன் காளைக்கு அருள் வந்து வாக்கு கேட்டு திருவிழா தேதி குறிக்கப்பட்டது. பின்னர் அருள்வாக்கில் சொன்னபடி முதலில் காளையை 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் 44 பேர் ஏழு நாட்களாக 47 கிராமங்களுக்கும் நடைபயணமாக சென்று திருவிழா நடத்த காணிக்கை திரட்டி திருவிழா நடத்தப்படும் இவை 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தான் திருவிழா நடந்தது.
மீண்டும் காளைக்கு அருள் வந்தால் மட்டுமே திருவிழா நடக்கும் என்று அப்பகுதி மலைவாழ் மக்கள் கூறுகின்றனர். அதன்படி ஒடுகத்தூர் அடுத்த கட்டியாம்பட்டு மலை கிராமத்தில் சுமார் 20 ஆண்டுகள் கழித்து நேற்று முன்தினம் நள்ளிரவு பெருமாள் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக அருள் வந்த காளையை அலங்கரித்து அதனை ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். பின்னர் கோவில் உள்ள புற்றுக்கு வண்ண மலர்களால் அலங்கரித்து சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
அப்போது 48 நாட்கள் விரதம் இருந்து காப்பு கட்டியவர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் தங்கள் நேத்திக் கடனை செலுத்தினர். மேலும் அருள் வந்த காளைக்கு படையல் இட்டு அதனிடம் மலைவாழ் மக்கள் வாக்கு கேட்டனர். அதேபோல் கொடி மரத்தில் நெய்விளக்கேற்றி சுவாமியை வழிபட்டனர். இதில் 47 மலை கிராம மக்கள் மற்றும் சுற்றுபகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.