மசினகுடி அருகே 3 நாட்கள் தேடுதலுக்குப்பிறகு தாயுடன் குட்டி யானை சேர்ப்பு-வாஞ்சையுடன் துதிக்கையால் வருடி பாசத்தை வெளிப்படுத்தியதால் வனத்துறையினர் நெகிழ்ச்சி


மசினகுடி அருகே 3 நாட்கள் தேடுதலுக்குப்பிறகு  தாயுடன் குட்டி யானை சேர்ப்பு-வாஞ்சையுடன் துதிக்கையால் வருடி பாசத்தை வெளிப்படுத்தியதால் வனத்துறையினர் நெகிழ்ச்சி
x

மசினகுடி அருகே 3 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு தாய் யானையிடம் குட்டி யானையை வனத்துறையினர் சேர்த்தனர். அப்போது குட்டியை வாஞ்சையுடன் துதிக்கையால் வருடி தாய் யானை பாசத்தை வெளிப்படுத்தியது. இந்த காட்சியை கண்ட வனத்துறையினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.

நீலகிரி

கூடலூர்

மசினகுடி அருகே 3 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு தாய் யானையிடம் குட்டி யானையை வனத்துறையினர் சேர்த்தனர். அப்போது குட்டியை வாஞ்சையுடன் துதிக்கையால் வருடி தாய் யானை பாசத்தை வெளிப்படுத்தியது. இந்த காட்சியை கண்ட வனத்துறையினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.

குட்டி யானை

மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் 29-ம் தேதி கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சீகூரஹல்லா வனப்பகுதியில் உள்ள ஆற்றில் தண்ணீரில் குட்டி யானை ஒன்று சிக்கி உள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து சென்று பிறந்து ஒரு மாதம் மட்டுமே ஆன குட்டி யானையை மீட்டனர். ஆனால் தாய் காட்டு யானை அப்பகுதியில் காணவில்லை.

இதனால் குட்டியை தாய்யானையுடன் சேர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதற்காக கால்நடை டாக்டர்கள் ராஜேஷ் குமார், கலைவாணன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மற்றும் வன ஊழியர்கள் கொண்ட 8 குழுக்கள் அமைக்கப்பட்டு சிங்கரா, சீகூர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இருப்பினும் தாய் காட்டு யானையை கண்டுபிடிக்க முடியவில்லை.

தாய் யானையுடன் சேர்ப்பு

தொடர்ந்து 2 டிரோன்களையும் பறக்க விட்டு வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காங்கிரஸ் மட்டம் வனத்தில் பெண் காட்டு யானை மற்றும் சற்று தொலைவில் ஆண் காட்டு யானை நிற்பதை வனத்துறையினர் கண்டனர். இதைத் தொடர்ந்து ஒரு மினி லாரியில் குட்டி யானையை வனத்துறையினர் காங்கிரஸ் மட்டம் பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் பெண் காட்டு யானையின் அருகே குட்டியை அனுப்பி வைத்தனர்.

அப்போது ஆண் காட்டு யானை வனத்துறையினரை தாக்குவதற்காக ஆவேசமாக ஓடி வந்தது. இதனால் வனத்துறையினர் அங்கிருந்து தப்பி ஓடினர். மேலும் பெண் யானை தனது குட்டியை கண்டு வாஞ்சையுடன் துதிக்கையால் வருடியவாறு தாய்மையை உணர்த்தியது. சற்று தொலைவில் நின்று வனத்துறையினர் இந்த பாச நிகழ்வை கண்டு நெகிழ்ச்சி அடைந்தனர். தற்போது குட்டி யானை தனது தாயுடன் நிற்பதை வனத்துறையினர் நேற்றும் உறுதி செய்தனர்.

கள இயக்குனர் தகவல்

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:- பூதிபட்டி கேம்ப் அருகில் ஒரு யானைக் கூட்டமும், காங்கிரஸ் மட்டத்தில் ஒரு யானை கூட்டம் இருப்பதாக தகவல் வந்தது. உடனடியாக குட்டி யானை மினி லாரியில் ஏற்றி அப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டது. ஆனால் செல்லும் வழியில் பூதிபட்டி அருகே இருந்த கூட்டம் நகர்ந்து வேறு இடத்திற்கு சென்று விட்டதாக தெரிவித்தார்கள். எனவே குட்டி யானை காங்கிரஸ் மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது செல்லும் வழியில் பாதைக்கு சுமார் 15 மீட்டரில் ஒரு பெண் யானை இருந்தது. உடனடியாக வண்டியை நிறுத்தி மருத்துவர்கள் அந்த யானையைப் பார்த்தனர்.

பால் கொடுக்கும் பருவத்தில் பெண் யானை இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் குட்டி யானையின் மீது சேறும், சிறிதளவு சாணமும் பூசப்பட்டது.

பத்திரமாக உள்ளது

பின்னர் தாய் யானையை நோக்கி குட்டி யானையை அனுப்பி விட்டனர். உடனடியாக குட்டி யானையும் பிளிற ஆரம்பித்தது. இந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஆண் யானை சத்தமிட்டு கொண்டு வேகமாக ஓடி வந்து குட்டியை சுற்றி வந்தது. பின்னர் குட்டியை அதே இடத்தில் நிறுத்தி விட்டு வன குழுவினரை சுமார் 200 மீட்டர் தூரம் விரட்டியது. பின்னர் அது மீண்டும் திரும்பி சென்று குட்டி யானையை மெதுவாக அழைத்து சென்றது. தற்போது தாய் யானையுடன் குட்டி பத்திரமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story