பயங்கரவாதியுடன் செல்போனில் பேசிய விவகாரம்:30 மணி நேர விசாரணைக்கு பிறகு வாலிபர் விடுவிப்பு
மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தில் பயங்கரவாதியுடன் செல்போனில் பேசிய நாகர்கோவில் வாலிபர் 30 மணி நேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
நாகர்கோவில்:
மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தில் பயங்கரவாதியுடன் செல்போனில் பேசிய நாகர்கோவில் வாலிபர் 30 மணி நேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
குக்கர் குண்டு வெடிப்பு
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி பகுதியில் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தை சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா சொப்புகுட்டே கிராமத்தை சேர்ந்த ஷாரிக் (வயது 22) என்பவர் அரங்கேற்றியதும், அவர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது ஷாரிக் குண்டு வெடிப்பில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே மங்களூருவில் குக்கர் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதி ஷாரிக்கின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டு அவருடன் பேசியவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டது. அப்போது நாகர்கோவில் கோட்டார் கம்பளத்தில் வசித்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த அஜிம் ரகுமான் (22) என்பவரும் பயங்கரவாதியான ஷாரிக்கிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.
ரகசிய இடத்தில் வைத்து விசாரணை
இதைத்தொடர்ந்து அஜிம் ரகுமானை கடந்த 20-ந் தேதி மாலை 6 மணியளவில் தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அஜிம் ரகுமான் கம்பளத்தில் உள்ள ஒரு துரித உணவு தயார் செய்யும் கடையில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் அவர் வேலை பார்க்கும் கடை உரிமையாளரின் மனைவிக்கு பயங்கரவாதியின் செல்போனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது பயங்கரவாதி இந்தியில் பேசியதாகவும், அது அந்த பெண்ணுக்கு புரியாமல் இந்தி தெரிந்த அஜிம் ரகுமானிடம் செல்போனை கொடுத்து பேச சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பேசிக்கொண்டிருந்த போது திடீெரன இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதால் தனது செல்போனில் இருந்து அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியதாக அஜிம் ரகுமான் போலீசாரிடம் கூறினார்.
30 மணிநேரம் விசாரணை
எனினும் அஜிம் ரகுமானிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் பயங்கரவாதிக்கு, அஜிம் ரகுமான் தவறுதலாக தான் போன் செய்தது தொியவந்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் அஜிம் ரகுமானை போலீசார் விடுவித்தனர். சொந்த மாநிலத்துக்கு செல்ல கூடாது என்றும், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்தனர். அஜிம் ரகுமானிடம் போலீசார் 30 மணிநேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.