ஒரு மாதத்துக்கு பிறகு கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.100-க்கு கீழ் வந்தது


ஒரு மாதத்துக்கு பிறகு கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.100-க்கு கீழ் வந்தது
x

ஒரு மாதத்துக்கு பிறகு கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு கீழ் வந்துள்ளது. விலை குறைந்து வருவதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை,

தக்காளி விலை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.180 வரை விற்பனை ஆனது. இது வெளி மார்க்கெட், சில்லரை கடைகளில் ரூ.200-க்கு மேல் சென்றது. தக்காளியை வாங்க முடியாத சூழலுக்கு சென்றதால், இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்தனர்.

எப்போது விலை குறையும்? என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் இருந்து கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை தினமும் குறைந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது.

வரத்து அதிகரிப்பு

கடந்த 1-ந்தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை ஆனது. நேற்று மீண்டும் விலை குறைந்து காணப்பட்டது. கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை குறைந்து ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.90 வரை விற்கப்பட்டது.

இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு தக்காளி விலை ரூ.100-க்கு கீழ் வந்து இருக்கிறது. வரத்து சற்று அதிகரித்துள்ளதால், தக்காளி விலை குறைந்து வருவதாக கூறும் வியாபாரிகள், இனி வரக்கூடிய நாட்களிலும் விலை சரிந்து, மக்கள் வாங்கக்கூடிய அளவுக்கு விற்கப்படும் என்று தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக விலை குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story