மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்க அமைச்சர் கீதாஜீவன் அறிவுறுத்தல்


மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் 5 நிமிடம் அறிவுரை வழங்குங்கள் என்று அமைச்சர் கீதாஜீவன் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் 5 நிமிடம் அறிவுரை வழங்குங்கள் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த திருப்புமுனை வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தினி கவுசல் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

போதை பழக்கம்

தூத்துக்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திருப்புமுனை என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் தமிழகத்தில் பெண்களை பாதுகாப்பதற்காக தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் மூலம் குழந்தை திருமணங்கள் கட்டுபடுத்தப்பட்டு உள்ளன. ஆனாலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்கள் அதிக அளவு போதை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்கள். அவர்களை கண்டறிந்து ஆசிரியர்கள், மாணவர்களை படிக்க வைப்பது மட்டும் நோக்கமாக இல்லாமல், அவர்களை நல்வழிபடுத்த வேண்டும். மது அருந்துவது தெரிந்த உடனே அந்த மாணவனை நல்வழிபடுத்த உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

அறிவுரை

ஒழுக்கமில்லாமல் வெறும் படிப்பை வைத்து மாணவர்கள் என்ன செய்ய முடியும். எனவே மாணவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். அவர்களுக்கு ஆலோசனைகள் கொடுங்கள். மதுவில் இருந்து மீளமுடியும், கஞ்சா போன்ற போதையில் இருந்து மீளமுடியாது. 18 வயதுக்கு முன் திருமணம் செய்யும் குழந்தை திருமணத்தை தடுக்க பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். நாட்டின் எதிர்காலமாக விளங்கும் இன்றைய மாணவர்கள் போதை போன்ற தவறான வழியில் செல்வதை தடுக்க ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மாணவர்களுக்கு 5 நிமிடம் அறிவுரைகள் வழங்குங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சுப்பையா வித்யாலயம் பள்ளி மாணவிகள் 385 பேருக்கு ரூ.19 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான சைக்கிள்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். நிகழ்ச்சிகளில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story