அண்ணனை கொலை செய்துவிட்டு, தற்கொலை போன்று நாடகமாடிய தம்பி கைது


அண்ணனை கொலை செய்துவிட்டு, தற்கொலை போன்று நாடகமாடிய தம்பி கைது
x

தூத்துக்குடியில் அண்ணனை கொலை செய்துவிட்டு, தற்கொலை போன்று நாடகமாடிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அண்ணனை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய தம்பியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

விஷம் குடித்ததாக..

தூத்துக்குடி டூவிபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல். இவரது மூத்த மகன் ஜீவன் ஜோசுவா (வயது 29). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி வீட்டில் குடிபோதையில் தகராறு செய்து வந்தாராம். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த ஜீவன்ஜோசுவா தனது தாயிடம் தகராறு செய்து உள்ளார். பின்னர் அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக, அவரது தம்பி தவசிமணி (23) ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். ஆனால் ஜீவன் ஜோசுவா வீட்டிலேயே இறந்து விட்டதால், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை

இது குறித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று ஜீவன் ஜோசுவா உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. இதில் ஜீவன் ஜோசுவா கழுத்தை நெறித்தும், வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றியும் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து ஜீவன் ஜோசுவாவின் தம்பி பிளம்பர் தவசுமணியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஜீவன் ஜோசுவா குடிபோதையில் தனது தாயிடம் தகராறு செய்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த தம்பி தவசிமணி, ஜீவன் ஜோசுவாவின் வாயில் விஷத்தை ஊற்றி உள்ளார். பின்னர் துப்பட்டாவால், அவரது கழுத்தை நெறித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தவசிமணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணனை கொலை செய்து விட்டு தம்பி தற்கொலை நாடகமாடிய சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story