சாவி வைத்திருந்த இடத்தை நோட்டமிட்டு அறிந்து வீடு புகுந்து 45 பவுன் நகை கொள்ளை
சாவி வைத்திருந்த இடத்தை நோட்டமிட்டு அறிந்து எடுத்து திறந்து, வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
அவனியாபுரம்,
சாவி வைத்திருந்த இடத்தை நோட்டமிட்டு அறிந்து எடுத்து திறந்து, வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கொத்தனார்
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள ஓ.ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி(வயது 42). கொத்தனார். இவருடைய மனைவி, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
வழக்கமாக இவர்கள், வீட்டை பூட்டி விட்டு அதன் சாவியை வீட்டின் வெளி பகுதியில் வைத்துவிட்டு செல்வதுண்டு. இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை திறந்து வீட்டிற்குள் புகுந்தனர்.
நகை, பணம் கொள்ளை
பின்னர் அவர்கள், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 44½ பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பினர்.
இதற்கிடையே, வேலைக்கு சென்ற தம்பதி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பெருங்குடி போலீசாருக்கு பாண்டி தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.