சிலிண்டரை திறந்துவிட்டு பற்ற வைத்ததுடன், தூக்குப்போட்டு தற்கொலை செய்த வாலிபர்
ராஜபாளையத்தில் கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு தீயை பற்ற வைத்து தீக்காயம் அடைந்த நிலையில், பக்கத்து வீட்டுக்கு ஓடி தூக்குப்போட்டு தற்கொலை செய்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. காப்பாற்ற முயன்ற 2 பேர் தீக்காயம் அடைந்தனர்.
ராஜபாளையத்தில் கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு தீயை பற்ற வைத்து தீக்காயம் அடைந்த நிலையில், பக்கத்து வீட்டுக்கு ஓடி தூக்குப்போட்டு தற்கொலை செய்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. காப்பாற்ற முயன்ற 2 பேர் தீக்காயம் அடைந்தனர்.
சிலிண்டரை திறந்து விட்டார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சமந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 35). மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக ஒரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தார்.
சம்பவத்தன்று காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள அவரது சகோதரி முத்துமாரி வீட்டிற்கு சென்றார். அங்கு சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு அறை கதவுகளை எல்லாம் மூடிவிட்டார்.
சமையல் கியாஸ் நாற்றத்தை அறிந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமசுப்பு (32), கருப்பசாமி ஆகிய 2 பேரும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் முத்துமாரி வீட்டுக்கு சென்று கோபாலகிருஷ்ணனை காப்பாற்ற அறைக்குள் நுழைந்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
அதற்குள் கோபாலகிருஷ்ணன் தீயை பற்ற வைத்து தீ லேசாக பரவிய நிலையில் காப்பாற்ற சென்ற ராமசுப்பு மற்றும் கருப்பசாமிக்கு தீக்காயம் ஏற்பட்டது.
பின்னர் கோபாலகிருஷ்ணன் உடலில் தீக்காயங்களுடன் தீப்பிடித்த அறையில் இருந்து வெளியேறினார். தனது சகோதரி வீட்டில் இருந்து வெளியேறிய கோபாலகிருஷ்ணன் அருகில் உள்ள பிரியா என்பவர் வீட்டுக்கு சென்று அங்குள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காயம் அடைந்த ராமசுப்புவும், கருப்பசாமியும் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து ராமசுப்புவின் புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.