4 நாட்கள் பட்டினி கிடந்து அடம்பிடித்து வாங்கிய மோட்டார் சைக்கிள் உயிரை பறித்தது
குளச்சல் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவத்தில் 4 நாட்கள் பட்டினி கிடந்து அடம்பிடித்து வாங்கிய மோட்டார் சைக்கிள் உயிரை பறித்த உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
குளச்சல்,
குளச்சல் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவத்தில் 4 நாட்கள் பட்டினி கிடந்து அடம்பிடித்து வாங்கிய மோட்டார் சைக்கிள் உயிரை பறித்த உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
மணல் ஆலை ஒப்பந்த தொழிலாளி
மணவாளக்குறிச்சி அரசு பள்ளிக்கூடம் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவருடைய மகன் ரோகன் (வயது19). பாலிடெக்னிக் படித்து விட்டு மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல். மணல் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ரோகன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த போது அவருடைய நண்பர் வந்து, தான் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கியதாகவும் அதற்கு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தன்னுடன் உடையார்விளைக்கு வருமாறு அழைத்தார்.
இதையடுத்து அவர்கள் உடையார்விளை நோக்கி புறப்பட்டனர். நண்பர் புதிய மோட்டார் சைக்கிளில் முன்னால் செல்ல பின்னால் ரோகன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ரோகனின் மோட்டார் சைக்கிளின் பின்னால் உறவினர் அஸ்வின் (19) அமர்ந்திருந்தார்.
பரிதாப சாவு
அவர்கள் குளச்சல் அருகே உள்ள லட்சுமிபுரம் சந்திப்பு பகுதியில் சென்ற போது, ரோகனுக்கு முன்பு சென்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் அவற்றை ஓட்டி வந்தவர்கள் சாலையில் விழுந்து கிடந்தனர். அவர்கள் மீது மோதாமல் இருக்க ரோகன் மோட்டார் சைக்கிளை திடீரென சாலையோரம் திருப்பினார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ஓடையில் பாய்ந்தது. இதில் ரோகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். பின்னால் இருந்த அஸ்வினின் இடது கை முறிந்தது. அவர் உடையார்விளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடம் பிடித்து வாங்கினார்
இந்த நிலையில் அடம்பிடித்து வாங்கிய மோட்டார் சைக்கிள் வாலிபரின் உயிரை பறித்த உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரோகன் கடந்த 2 ஆண்டுகளாக விலை உயர்ந்த அதிநவீன மோட்டார் சைக்கிள் வாங்கி தர கேட்டு பெற்றோரிடம் அடம் பிடித்து வந்தார். அதற்கு வீட்டில் மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனால் அவர் 4 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் மனம் மாறிய பெற்றோர் சில நாட்களுக்கு முன்பு தான் ரோகன் விரும்பியபடி விலை உயர்ந்த அதிநவீன மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்தனர்.
இந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற போதுதான் அவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். விபத்தில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியது. அதை குளச்சல் போலீசார் கைப்பற்றி போலீஸ் நிைலயத்துக்கு எடுத்து சென்றனர்.
4 நாட்கள் பட்டினி கிடந்து அடம்பிடித்து வாங்கிய மோட்டார் சைக்கிள் உயிரை பறித்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.