தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக விஜய், அஜித் குரல் கொடுக்க வேண்டும்-அர்ஜூன் சம்பத் பேட்டி
“தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக நடிகர்கள் விஜய், அஜித் குரல் கொடுக்க வேண்டும்” என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.
திருச்செந்தூர்:
"தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக நடிகர்கள் விஜய், அஜித் குரல் கொடுக்க வேண்டும்" என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.
சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் குடும்பத்துடன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் விருந்தினர் மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மே முதல் நாள் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உண்மையில் விஸ்வகர்ம ஜெயந்தியான செப்டம்பர் 17-ந் தேதி உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட வேண்டும். ரஷியா, சீனா நாட்டில் கம்யூனிஸ்டு கட்சிகள் தொழிலாளர் தினத்தை தனித்தனியாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அமைச்சர் பேசிய ஆடியோ வெளிவந்துள்ளது. இந்த விவகாரத்தில் கோர்ட்டு தாமாக முன்வந்து நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடக்க வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க. பைல்ஸ் என்பது சாதாரண விஷயம் அல்ல. இன்னும் பகுதி 1, பகுதி 2 என வரிசையாக வரப்போகிறது. ரூ.500 கோடி வரை கேட்டு கனிமொழி, உதயநிதி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் தரவுகளை நீதிமன்றத்தில் வழங்குவோம்.
லஞ்ச ஊழல் வழக்கில் தி.மு.க. அரசை மத்திய அரசு 356-வது பிரிவை பயன்படுத்தி டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மோசமான நிலையிலேயே உள்ளது.
விஜய்-அஜித்
நடிகர் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் எந்த குடும்ப பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் மக்களை கவர்ந்தவர். கருணாநிதியை மேடையில் வைத்துக் கொண்டே அடக்குமுறை ஒடுக்கு முறையை எதிர்த்து பேசியவர். எனவே அஜித் மீண்டும் லஞ்ச ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அதுபோல் நடிகர் விஜய்யும் குரல் கொடுக்க வேண்டும். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அவர் பிரதமர் மோடி, அண்ணாமலையை ஆதரிக்க வேண்டும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.