பட்டுக்கோட்டையில் வருகிற 12-ந் தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள்


பட்டுக்கோட்டையில் வருகிற 12-ந் தேதி முதல்   பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள்
x

பட்டுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் வருகிற 12-ந் தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் வருகிற 12-ந் தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் ஒழிப்பு

தஞ்சை மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் மொத்த விற்பனையாளர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், சாலையோர வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகளுடனான பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் அமலதாஸ் பேசுகையில், 'அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு சட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். அனைத்து விற்பனை மண்டலங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பதாகைகள் வைக்க வேண்டும்' என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து வர்த்தக சங்க செயலாளர் தன்ராஜ், ஓட்டல் அதிபர் குமார் மற்றும் பலர் பேசினர். இதில் ஆணையர் சவுந்தரராஜன் பேசுகையில், 'பட்டுக்கோட்டையில் வருகிற 12-ந் தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். எனவே அனைத்து விற்பனையாளர்களும் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தவிர்க்க வேண்டும்

பொதுமக்களும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான சீட்கள், விரிப்பான்கள், தட்டுகள், பேப்பர் கப்புகள், தெர்மோகோல் கப்புகள், தண்ணீர் பக்கெட்டுகள், ஸ்டிராக்கள், கேரிபேக்குகள், கொடிகள், நான் ஓவன் பி.பி. பைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வாழை இலை, தாமரை இலை, அலுமினியம் பாயில், பேப்பர் சுருள், பாக்கு மட்டை, அலுமினியம், எவர்சில்வர் தட்டுகள், பீங்கான் பொருட்கள், எவர்சில்வர் குவளைகள், மண் குவளைகள், மண் பாத்திரம், கண்ணாடி பாத்திரம், கண்ணாடி குவளைகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் துப்புரவு ஆய்வாளர்கள் அறிவழகன், ஆரோக்கியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துப்புரவு அலுவலர் நெடுமாறன் நன்றி கூறினார்.


Next Story