அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி ரெயிலை வாரம் முழுவதும் இயக்க வேண்டும்
5 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி ரெயிலை வாரம் முழுவதும் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
5 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி ரெயிலை வாரம் முழுவதும் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகல ரெயில் பாதை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட மீட்டர் கேஜ்பாதையில் ெரயில் போக்குவரத்து நடைபெற்றது.
இந்த மீட்டர்கேஜ் பாதையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ெரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை சுமார் 30 கி.மீட்டர் தூரம் புதிய அகல ெரயில் பாதை ரூ.294 கோடியில் அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே டெமு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
5 நாட்கள் இயக்கப்படுகிறது
இந்த நிலையில் தற்போது இந்த ரெயில் அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்களுக்கு இயக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருச்சிக்கு மாலையில் மட்டும் இயக்கப்படுகிறது.
சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள், இந்த ெரயிலுக்கு விடுமுறை விடப்படுகிறது. தொடர்ந்து ரெயில் இயக்காததால் ரெயில்வே துறைக்கு அதிக வருவாய் இன்றி பெயரளவுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
பயண கட்டணம்
இந்த ரெயில் அகஸ்தியன்பள்ளி, வேதாரண்யம், தோப்புத்துறை, நெய்விளக்கு, குரவப்புலம், கரியாப்பட்டினம் என 5 நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்கிறது. அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை எங்கு ஏறி இறங்கினாலும் பயண கட்டணம் ரூ.30 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பு ெரயில் இருந்தால் மட்டுமே இந்த ெரயில் போக்குவரத்தை லாபகரமாக இயக்க முடியும்.
வாரம் முழுவதும் இயக்க வேண்டும்
முன்பு இருந்தது போல அகஸ்தியன்பள்ளியில் இருந்து சென்னைக்கு முன்பதிவு செய்து செல்ல கூடிய நேரடி ெரயிலும் இணைக்கப்பட்டால் மட்டுமே ரெயில் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி ரெயிலை வாரத்தின் 7 நாட்களும் இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.