முள்ளியாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள்
திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தில் முள்ளியாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தில் முள்ளியாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடைமடை பகுதி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதி. இந்த பகுதியில் தொழிற்சாலைகளோ, வேறு எந்த வருமானங்கள் தரக்கூடிய ெதாழில்களோ இல்லை. முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள பகுதியாகும்.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் தண்ணீர் முறையாக கடைமடை பகுதி வரை வந்தடைந்தால் இந்த பகுதியில் சம்பா, தளாடி, குறுவை என முப்போக சாகுபடி நடைபெறும். மேலும் கோடை சாகுபடியும் செய்யப்படும்.
பயிர்கள் பாதிப்பு
ஆனால் சமீபகாலமாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் உரிய காலத்தில் திறக்கப்பட்டாலும், ஆறு, வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரமுடியாத நிலை உள்ளது. மேலும் நீர்நிலைகளில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளால் வயல்களுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம் வரையும் மற்றும் மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் ஆறாக முள்ளியாறு உள்ளது.
ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை
தற்போது திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தில் உள்ள முள்ளியாற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவு வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. தண்ணீரே தெரியாதபடி ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளதால், இந்த ஆற்றில் குளிப்பவர்களுக்கு தோல் நோய்கள் ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிப்பது இல்லை. ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் முள்ளியாற்றில் இருந்து வயல்களுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் பயிர்கள் கருகி வருகின்றன.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், முள்ளியாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.